கானா பாடியே கொலை மிரட்டல்’.. பாலியல் புகார்.. இசையமைப்பாளர் சபேஷ் சாலமன் கைது!
சென்னை: சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கானா இசையமைப்பாளர் சபேஷ் சாலமன் என்பவர் மீது பாலியல் புகார் அளித்த நிலையில், போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அந்த பெண் கானா பாடகரும் இசையமைப்பாளருமான சபேஷ் சாலமன் உடன் கடந்த 2020ம் ஆண்டு முதல் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், சமீப காலமாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அந்த பெண் புகார் அளித்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

பாலியல் புகார்
சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த கானா பாடகரும் இசையமைப்பாளருமான சபேஷ் சாலான் என்பவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அப்போது அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோவையும் இணையத்தில் வெளியிடுவேன் எனக் கூறி அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கானா இசையமைப்பாளர் சபேஷ் சாலமன் என்பவர் மீது பாதிக்கப்பட்ட அந்த பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.

கொலை மிரட்டல்
தனது இஷ்டத்துக்கு எல்லாம் இணங்க வேண்டும் என்றும், தான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கொன்று விடுவேன் என கானா பாட்டுப் பாடியே தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் சபேஷ் சாலமன் என தனது புகாரில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தந்தை உடந்தை
சபேஷ் சாலமன் செய்யும் தவறுகளை அவரது தந்தையிடம் எடுத்துக் கூறி தனக்கு தொந்தரவு செய்யாமல் இருக்கக் கோரிய நிலையில், அவரது தந்தையும் மகனுடன் சேர்ந்து கொண்டு மிரட்டுகிறார் என்றும் சபேஷ் சாலமனின் தவறான நடவடிக்கைகளுக்கு அவரது தந்தையும் உடந்தை என அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஆபாச புகைப்படங்கள்
சபேஷ் சாலமன் உடன் நெருக்கமாக இருந்த போது எடுத்த ஆபாச புகைப்படங்களை அவரது யூடியூப் சேனலிலும் வெளியிட்டு தன்னை அவமானப்படுத்தி உள்ளார் என்றும் பாதிக்கப்பட்ட அந்த பெண் புகார் அளித்துள்ளார். பாலியல் தொல்லை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கானா பாடகர் சபேஷ் சாலமனை தேடிச் சென்றனர்.

சபேஷ் சாலமன் கைது
திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டு பின்னர் பாலியல் கொடுமைகளை கொடுத்து வந்ததாக குற்றம்ச்சாட்டப்பட்ட நிலையில், தற்போது சபேஷ் சாலமனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் மீது, 354 ஐபிசி, 506(2) மற்றும் 64 ஐடி ஆக்ட் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.


Click it and Unblock the Notifications











