பாயல் கோஷ் கொடுத்த பாலியல் புகார்.. விசாரணைக்கு ஆஜராக அனுராக் காஷ்யப்புக்கு மும்பை போலீசார் சம்மன்
மும்பை: பாலிவுட் நடிகை பாயல் கோஷ் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் விசாரிக்க இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
பாலிவுட்டுக்கு என்ன தான் ஆச்சு என்றே தெரியவில்லை. தொடர்ந்து ஏகப்பட்ட கிரைம்களாக நடந்து வருகின்றன.
பல முன்னணி பிரபலங்கள் வசமாக போலீஸ் விசாரணையில் சிக்கி வருகின்றனர்.

பாலிவுட் படத்தை விட
பாலிவுட் படத்தை விட செம த்ரில்லராக பாலிவுட் பிரபலங்களின் விவகாரம் நிஜ வாழ்க்கையில் நடந்து வருகிறது. நடிகை ரியா சக்கரவர்த்தி கைதான விவகாரம், சுஷாந்த் சிங் மரணம் உள்ளிட்டவற்றை படமாக எடுக்க ஏகப்பட்ட தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் போட்டி போட்டு வருவது இன்னும் வேடிக்கை அதிகரித்து வருகிறது.

போதைப் பொருள் விவகாரம்
பாலிவுட்டின் கனவுக் கன்னிகளாக கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக என்சிபி விசாரணைக்கு நேரில் ஆஜராகினர். அவர்களது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

என்னை பலவந்தப்படுத்தினார்
இந்நிலையில், பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலிவுட் நடிகையான பாயல் கோஷ் பாலியல் புகார் வழக்கு தொடுத்து இருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. நடிகை பாயல் கோஷுக்கு ஆதரவாகவும், இயக்குநர் அனுராக்கிற்கு ஆதரவாகவும் பிரபலங்களும், ரசிகர்களும் களமிறங்கி உள்ளனர்.

அனுராக் மறுப்பு
அனுராக் காஷ்யப் தன்னை பலவந்தப்படுத்தி பாலியல் ரீதியாக அத்துமீறினார் எனக் கூறிய நிலையில், அதனை இயக்குநர் அனுராக் காஷ்யப் முற்றிலுமாக மறுத்துள்ளார். அனுராக்கிற்கு ஆதரவாக அவரது முன்னாள் மனைவி, மனைவி மற்றும் நடிகை டாப்சி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சாகும் வரை உண்ணாவிரதம்
பாலியல் புகார் கொடுத்தும் இயக்குநர் அனுராக் காஷ்யப்பை ஏன் இன்னும் கைது செய்து விசாரிக்கவில்லை என நடிகை பாயல் கோஷ் காட்டமாக கேள்வி எழுப்பினார். பின்னர், அனுராக்கை விசாரணை செய்யவில்லை என்றால், சாகும் வரை உண்ணாவிரதம் எடுப்பேன் எனவும் மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக கவர்னரை சந்தித்தும் முறையிட்டார்.

அனுராக்கிற்கு சம்மன்
நடிகை பாயல் கோஷின் அழுத்தத்தைத் தொடர்ந்து மும்பை போலீசார் இயக்குநர் அனுராக் காஷ்யப்பிற்கு சம்மன் அனுப்பி இருக்கிறது. பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு நாளை வெர்சோவா காவல் நிலையத்தில் காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பை போலீசார் விசாரணை முன் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை இயக்குநர் அனுராக் முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











