பாலியல் புகாரில் சிக்கிய நிவின் பாலி.. கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: ஹேமா கமிட்டி கொடுத்த ரிப்போர்ட்டால் கேரள திரையுலகம் சில மாதங்களுக்கு முன்பு பற்றி எரிந்தது. நடிகைகளில் பலர் இயக்குநர்கள், நடிகர்களால் தங்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டிருப்பதாக ஓபனாகவே சொல்லிவிட்டார்கள். இதன் காரணமாக மலையாள சினிமா கலைஞர்கள் சங்கமான AMMA கூண்டோடு கலைக்கப்பட்டிருக்கிறது. சிலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தவகையில் நடிகர் நிவின் பாலி மீதும் ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்தார்.
கேரளாவிலிருந்து சிறந்த சினிமாக்கள் வந்துகொண்டிருக்கின்றன; சிம்பிள் லைனை வைத்துக்கொண்டு புகுந்து விளையாடுகிறார்கள் என்று சமீப காலமாக பாராட்டு பத்திரங்கள் வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அதற்கேற்றபடிதான் கடந்த சில காலமாகவே மலையாள திரையுலகிலிருந்து தரமான படைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அவை இந்திய அளவில் நல்ல வரவேற்பையும் பெற்று; எடுத்தால் மலையாள திரையுலகம் போல் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் கேட்டன.

ஹேமா கமிஷன் அறிக்கை: ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பாராட்டு பத்திரத்தின் மீது கறை படிந்து தலைகுனிந்து நிற்கிறது கேரள திரையுலகம். அந்த மாநில அரசால் கடந்த 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி; சினிமாவில் இருக்கும் பெண் கலைஞர்களிடம் நடத்திய விசாரணையில் பலர் தங்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டிருப்பதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். அதில் முக்கியமான இயக்குநர், நடிகர் என பலரது தலை உருளுகிறது.
ஓயாத பரபரப்பு: தினம் ஒரு தகவல் மாதிரி தினம் ஒரு பரபரப்பு அங்கிருந்து கிளம்புகிறது. இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், முகேஷ் உள்ளிட்டோர் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் பல முக்கிய நடிகர்களின் தலை இதில் உருளும் என்றும் விவரமறிந்தவர்கள் கூறினார்கள். அதேசமயம் கமிட்டியின் அறிக்கையிலிருந்து சில அம்சங்கள் மட்டும்தான் வெளியாகியிருக்கின்றன; முழுதாக வெளியானால் பெரும் பிரளயமே உண்டாகும் என்றும் திரைத்துறையினர் கருதுகிறார்கள்.
மோகன்லாலும் சர்ச்சையில்: முக்கியமாக AMMA தலைவராக இருந்த மோகன் லால் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். சூழல் இப்படி இருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் நிவின் பாலி மீதும் ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்தார். அதாவது எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் துறையில், 'நிவின் பாலி தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி துபாயில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்' என்று புகார் அளித்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போதிய ஆதாரங்கள் இல்லை: அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆறாவது ஆளாக நிவின் பாலி சேர்க்கப்பட்டார். பிறகு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்ததில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாட்களான (2023 டிசம்பர் 14,15) நிவின் பாலி துபாயில் இல்லையென்றும்; அவர் கேரளாவில்தான் இருந்தார் என்பதும் உறுதியானது. எனவே இந்த பாலியல் புகார் போலி என்று உறுதியாகியுள்ளது. இது பாலியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











