டிடிஎஃப் ஹீரோ ஆகிட்டாரு.. ஷாலின் ஜோயா இப்போ என்ன அவதாரம் எடுத்துருக்காங்க பாருங்க!
சென்னை: டிடிஎஃப் வாசனை மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கிய நிலையில், அவர் நடித்துள்ள ஐபிஎல் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. டிடிஎஃப் வாசன் மற்றும் ஷாலின் ஜோயா இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவின. ஆனால், திடீரென டிடிஎஃப் வாசன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார்.
இந்நிலையில், ஷாலின் ஜோயா இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கனவே கண்ணகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஷாலின் ஜோயா வெகு நாட்களாகவே இயக்குநராக வேண்டும் என போராடி வந்த நிலையில், தனது கனவு நிறைவேறிவிட்டது என பதிவிட்டு புதிய படத்தின் பூஜை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இயக்குநரான ஷாலின் ஜோயா: ஆர்.கே இன்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய படமொன்றில், மலையாள நடிகையும் இயக்குநருமான ஷாலின் ஜோயா தமிழில் அறிமுகமாகிறார். கே.எஸ். ராமகிருஷ்ணா தயாரிக்கும் இந்தப் படம், 90களின் பிற்பகுதியில் நடக்கும் ஒரு கிராமப்புற நகைச்சுவை ஃபேண்டஸி கதையாக உருவாகவுள்ளது. சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ஷ்ரத்தா ஶ்ரீநாத், கிஷோர் நடித்த 'கலியுகம்' திரைப்படத்தைத் தயாரித்த ஆர் கே இன்டர்நேஷனல், தரமான படைப்புகளையும் திறமையான கலைஞர்களையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும்: பிரபல மலையாள நடிகை ஷாலின் ஜோயா, தமிழில் 'கண்ணகி' படத்தில் நடித்தவர்; 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். மலையாளத்தில் அவர் இயக்கிய 'தி ஃபேமிலி ஆக்ட்' திரைப்படம் ஏற்கனவே கவனத்தை ஈர்த்த நிலையில், ஆர்.கே இன்டர்நேஷனலின் 18வது தயாரிப்பின் மூலம் தமிழில் இயக்குநராகப் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்.

நக்கலைட்ஸ் அருண்: இப்படத்தில், நக்கலைட்ஸ் புகழ் அருண் ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார். எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், இளவரசு, ஜாவா சுந்தரேசன், ஜென்சன் திவாகர், அனிருத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தேவதர்ஷினி இதுவரை கண்டிராத ஒரு முக்கிய வேடத்திலும், அஷ்வின் காக்குமனு கௌரவ வேடத்திலும் திரையில் தோன்றவுள்ளனர்.
திறமைக்கு முன்னுரிமை: தயாரிப்பாளர் கே எஸ் ராமகிருஷ்ணா படம் குறித்து பேசுகையில், "நாங்கள் தயாரித்த 17 படங்களும் தரத்தில் சமரசம் இல்லாமல், திறமையான கலைஞர்களை ஊக்குவித்தன. அந்த வரிசையில் ஷாலின் ஜோயா இயக்கும் இந்தப் படமும் இணையும். அனைத்துத் தரப்பு வயதினரையும் கவரும் வகையில் இந்தத் திரைப்படம் உருவாகும்" என்று உறுதிபடத் தெரிவித்தார்.
ஃபேண்டஸி கதை: இயக்குநர் ஷாலின் ஜோயா தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்: "90களின் இறுதியிலும், 2000களின் தொடக்கத்திலும் நடக்கும் இந்தக் கதையில், ஒரு கிராமத்தில் நிகழும் சம்பவம் அப்பகுதி மக்களின் வாழ்க்கையை எப்படி மாற்றியமைக்கிறது என்பதை நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி கலந்து சொல்லவுள்ளோம். இப்படத்தைத் தயாரிக்க வாய்ப்பளித்த ராமகிருஷ்ணா சாருக்கு நன்றி. திறமையான கலைஞர்களுடன் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. தரமான படைப்புகளை ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள் எங்கள் படத்திற்கும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறோம்," என்றார்.
கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் ஏ பிரசாத் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். டி சந்தோஷ் கலை இயக்கத்தை கையாள, வி சாய்பாபு உடைகளையும், பி பிரசாத் ஒப்பனையையும் கவனிக்கின்றனர். வி விஸ்வநாதன் தயாரிப்பு நிர்வாகியாகவும், நிகில் முருகன் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்கள்.
ஆர் கே இன்டர்நேஷனல் சார்பில் கே எஸ் ராமகிருஷ்ணா தயாரிப்பில், ஷாலின் ஜோயா இயக்கத்தில் உருவாகும் இந்தப் 'புரொடக்ஷன் நம்பர் 18' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.


Click it and Unblock the Notifications











