கரூர் துயரம் போல நடந்துவிடக் கூடாது.. ரசிகர்களின் கூட்ட நெரிசல் உஷாரான ஷாரூக் கான்.. மன்னிப்பே கேட்டுட்டாரு!
மும்பை: பாலிவுட் திரையுலகின் கிங் என்று அழைக்கப்படக்கூடிய ஷாரூக் கான் இன்று அதாவது நவம்பர் 2ஆம் தேதி தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். வருடா வருடம் தனது பிறந்த நாளில் தனது வீட்டின் முன் திரண்டு நிற்கும் ரசிகர்களை காண ஷாரூக் கான் வீட்டு பால்கனியில் நின்று கொண்டு கை அசைத்து, பறக்கும் முத்தங்களை வாரி வழங்குவார். ரசிகர்களும் ஷாரூக்கானுக்கு பிறந்த நாள் பரிசுகளுடன் அவரைக் காண குவிந்துள்ளார்கள். இப்படியான நிலையில் ஷாரூக் கான் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார்.
கடந்த ஒரு ஆண்டுக்குள்ளாக மட்டும் கூட்ட நெரிசல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். புஷ்பா 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின் போது ஒரு பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக வென்ற விட்டு பெங்களூருவில் ரோடு ஷோ நடத்திய போது அந்த கூட்டத்தினால், 11 பேர் நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெரிசல் மரணங்கள்: அதேபோல் கடந்த செப்டம்பர் மாதத்தில் கரூரில் நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சில தினங்களுக்கு முன்னர் கூட ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்த துயரம் அரங்கேறியது. மனித உயிர்களை எந்த காரணத்திற்காகவும் இழப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படி இருக்கும்போது, கூட்ட நெரிசலில் சிக்கி, மக்கள் மூச்சுத் திணறி, மிதி பட்டு இறக்கிறார்கள் என்பது கற்பனையிலும் அச்சத்தை ஏற்படுத்தும் நிகழ்வு. அப்படியான நிகழ்வுகளை தவிர்க்க, நாம் அனைவரும் மிகச் சரியான வழிமுறைகளை பின்பற்றினால் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்.
ரசிகர்கள் கூட்டம்: இப்படி இருக்கும்போது தனது பிறந்த நாளில் தன்னைப் பார்க்க தனது வீட்டின் முன் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு உள்ளார்கள் எனும் போது, தான் பால்கனியில் நின்று கொண்டு கை அசைத்தால் கூட, ரசிகர்கள் தன்னைப் பார்க்கும் ஆர்வத்தினால் நெரிசல் ஏற்பட்டு விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஷாரூக் கான் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்ட ஷாரூக் கான்: அதாவது, " எனக்காக காத்திருந்த எனது அன்பான ரசிகர்களை நான் வெளியே சென்று பார்க்க முடியாது என்று அதிகாரிகள் எனக்கு அறிவித்துள்ளனர். உங்கள் அனைவ்ரிடத்திலும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் இப்படியான முடிவு எடுக்க காரணமே, கூட்டக் கட்டுப்பாட்டுப் பிரச்னைகள் தான். மேலும் உங்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்காக மட்டும் தான். நான் இந்த முடிவை எடுத்துள்ளதற்கான காரணத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். என்னை நம்புங்கள்... உங்களை விட அதிகமாக உங்களைப் பார்ப்பதை நான் மிஸ் செய்வேன். உங்கள் அனைவரையும் பார்க்கவும் அன்பைப் பகிர்ந்து கொள்ளவும் ஆவலுடன் இருந்தேன், ஆனால் அது நடக்கவில்லை என்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் அனைவர் மீதும் பேரன்பு வைத்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகிறார்கள். அவரை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











