என்னது? பாஜகவின் பின்னடைவுக்கு ஜவான் படம்தான் காரணமா? அடித்துச் சொல்லும் யூடியூபர் துருவ் ரத்தே!
மும்பை: ஒட்டுமொத்த இந்தியா மட்டும் இல்லாமல் உலக நாடுகளும் இன்றைக்கு காத்துக்கொண்டு இருப்பது இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் 18வது மக்களவைப் பொதுத் தேர்தலின் முடிவுகளுக்காகத்தான். இன்று அதாவது ஜூன் 4ஆம் தேதி காலையில் இருந்து மிகவும் விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலைச் சந்தித்தது. அதேபோல், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து I.N.D.I.A என்ற கூட்டணியை அமைத்து தேர்தலைச் சந்தித்தனர்.
பின்னடைவைச் சந்தித்த பாஜக: தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்குப் பின்னர் வெளியான கருத்துக் கணிப்புகள் மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக எந்தவித சிரமும் இன்றி ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவித்தது. ஆனால் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வேட்பாளர்களுக்கு பல இடங்களில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்கள் சவால் அளித்து வருகின்றனர். இதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்னவென்றால், வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடி முதல் இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது பின்னடைவைச் சந்தித்ததுதான்.

ஜவான் படத்துக்கு நன்றி: மிகவும் பரபரப்பாக வாக்கு எண்ணிக்கை இந்தியா முழுவதும் நடைபெற்று வரும்போது, வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான யூடியூபர் துருவ் ரத்தே தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் ஷாரூக்கானை பாராட்டி ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஜவான் படத்தைக் குறிப்பிட்டு, " ஜவான் படத்தின் பங்களிப்பை நாம் மறந்து விடக்கூடாது. ஷாரூக்கான் மற்றும் ஜவான் படக்குழுவிற்கு நன்றிகள். ஜவான் படத்தின் மூலம் அரசாங்கம் மற்றும் மின்னணு வாக்கு இயந்திரங்களின் உண்மை முகத்தை வெளிக்காட்டிய திரைப்படம். இந்த திரைப்படம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. அரசாங்கத்திற்கு அடிபணிந்து செல்லாமல், அரசாங்கத்தில் நடைபெறும் குளறுபடிகளை வெளிக்காட்டும் திரைப்படத்தைக் கொண்டு வந்து பலரின் மனதை திறந்த ஷாரூக்கானுக்கு பாராட்டுகள்" என குறிப்பிட்டுள்ளார்.
அட்லீ சம்பவம்: ஜவான் திரைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியானது. தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் திரைப்படங்களை இயக்கி வெற்றி இயக்குநராக வலம்வந்த அட்லீ குமார், பாலிவுட்டில் ஜவான் திரைப்படம் மூலம் கால் பதித்தார். இந்த படத்தில் ஷாரூக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட பிரபல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க அதிரடி மற்றும் அரசியல் கலந்த படமாக வெளியான இந்த படம் பாலிவுட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டும் இல்லாமல், வசூலிலும் ரூபாய் 1000 கோடியைக் கடந்தது. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றியை எட்டுவதற்கு ஜவான் திரைப்படம் தடையாக அமைந்தது என யூட்டூபர் துருவ் ரத்தே கூறியுள்ளது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











