Shah Rukh Khan on Ajith: “ரஜினி, விஜய் ஓக்கே... ஆனால் அஜித் மிஸ்ஸிங்..” ஃபீல் பண்ண ஷாருக்கான்!
சென்னை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் வரும் 7ம் தேதி வெளியாகிறது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ஜவான் படத்தை ப்ரோமோட் செய்யும்விதமாக Ask SRK என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் ஷாருக்கான். அப்போது ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, அஜித் குறித்து ஷாருக்கான் பதில் சொன்னது வைரலாகி வருகிறது.

அஜித்தை மிஸ் பண்ணிட்டேன் : ஷாருக்கான் - அட்லீ காம்போவில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் இன்னும் மூன்று தினங்களில் வெளியாகிறது. செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகும் ஜவான் படத்திற்கு அட்வான்ஸ் புக்கிங்கும் தொடங்கிவிட்டது. எதிர்பார்த்ததை விடவும் அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை படைத்து வருகிறது ஜவான். இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனில் தீவிரம் காட்டி வருகிறார் ஷாருக்கான்.
ஜவான் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜவான் ட்ரெய்லரையும் அதிரடியாக களமிறக்கினார் ஷாருக்கான். இந்நிலையில், ரசிகர்களுடன் டிவிட்டரில் கலந்துரையாடிய ஷாருக்கான், அவர்களின் கேள்விகளுக்கும் சுவாரஸ்யமாக பதிலளித்தார். Ask SRK என்ற ஹேஷ்டேக்கில் நடைபெற்ற இந்த உரையாடலில், சென்னை குறித்தும் கோலிவுட் ஹீரோக்கள் பற்றியும் ரசிகர் கேள்வி எழுப்பினார்.
அதாவது, நீண்ட இடைவேளைக்குப் பிறகு சென்னை வந்ததை எப்படி உணர்கிறீர்கள், எந்த நடிகர்கள், நடிகைகளை சந்தித்தீர்கள், யாரையெல்லாம் சந்திக்க விருப்பம் என கேட்டிருந்தார். அதற்கு பதில் கூறியுள்ள ஷாருக்கான், "ரஜினி சார், தளபதி விஜய் இருவரையும் சந்தித்துவிட்டேன். அஜித்தை தான் மீட் பண்ண முடியவில்லை, விரைவில் அது நடக்கும்" என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். அஜித்தை சந்திக்க ஷாருக்கான் விருப்பம் தெரிவித்துள்ளது ஏகே ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது.

ஜவான் படப்பிடிப்புக்காக சில மாதங்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்த ஷாருக்கான், விஜய்யை சந்தித்ததாக குறிப்பிட்டிருந்தார். அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினியையும் அவர் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அஜித்தை சந்திக்கவில்லை, இதனை குறிப்பிட்டே ஷாருக்கான் அவ்வாறு பதில் சொன்னதாக தெரிகிறது. ஷாருக்கான், அஜித் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியாது.
2001ம் ஆண்டு வெளியான 'அசோகா' படத்தில் ஷாருக்கானும் அஜித்தும் இணைந்து நடித்திருந்தனர். அப்போது முதல் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற விருது விழாவிற்கு வந்திருந்த ஷாருக்கான், அஜித் குறித்து நெகிழ்ச்சியாக பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஜித்தை சந்திக்க ஷாருக்கான் விருப்பம் தெரிவித்துள்ள டிவிட்டர் பதிவை, அஜித் ரசிகர்கள் ட்ரெண்டு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











