1000 கோடி க்ளப்பில் இணைந்தது பதான்.. மாஸ் காட்டும் ஷாருக்கான்
மும்பை: ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் இந்திய படங்களில் பதான் 5ஆவது படமாகும்.
பாலிவுட்டின் பாஷா என அழைக்கப்படுபவர் ஷாருக்கான். நான்கு ஆண்டுகளுக்கு பின் ஷாருக்கான் நடித்திருக்கும் படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

எதிர்ப்பை சந்தித்த பதான் திரைப்படம்
நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருப்பதால் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது. படத்தின் சிங்கிள் பாடல் வெளியானபோது அதில் தீபிகா படுகோன் அணிந்திருந்த உடையை வைத்து ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பலரும் படத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கு இடையில் படமானது கடந்த ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

பதான் படத்துக்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனம்
இந்தச் சூழலில் படத்துக்கு எந்த மாதிரியான விமர்சனங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் பதான் படத்துக்கு ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தனர். மேலும் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியிருந்த பதானில் ஷாருக்கானின் நடிப்பும், ஜான் ஆபிரஹாமின் வில்லத்தனமும் சிறப்பாக இருந்ததாகவும் குறிப்பிட்டனர். அதுமட்டுமின்றி சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான் நடித்திருந்தது சர்ப்பரைஸாக இருந்தது எனவும் ரசிகர்கள் கூறினர்.

1000 கோடி க்ளப்பில் பதான் திரைப்படம்
இந்நிலையில் பதான் திரைப்படமானது உலக அளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி (27ஆவது நாள்) பதான் திரைப்படம் இந்திய அளவில் 623 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 377 கோடி ரூபாயும் என மொத்தமாக உலக அளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. உலக அளவில் 1000 கோடி ரூபாய் வசூலித்த இந்திய படங்களில் பதான் 5ஆவது படமாகும்.

உலக அளவில் 1000 கோடி ரூபாய் வசூலித்த இந்திய படங்கள்
இதற்கு முன்னதாக தங்கல் (ஹிந்தி) 1968 கோடி ரூபாயும், பாகுபலி 2 (தெலுங்கு) 1747 கோடி ரூபாயும், கேஜிஎஃப் 2 (கன்னடம்) 1188 கோடி ரூபாயும், ஆர்ஆர்ஆர் (தெலுங்கு) 1174 கோடி ரூபாயும் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்திருக்கும் இந்திய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கானின் மாஸ் பதில்
ஷாருக்கான் நேற்று ட்விட்டர் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்களுக்கு அடுத்த பெரிய நட்சத்திரம் யார் என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஷாருக், "நான் ஒருபோதும் நடிப்பிலிருந்து ஓய்வு பெறமாட்டேன். ஒருவேளை என்னை வீழ்த்த நினைத்தால் முன்பைவிடவும் அதிரடியாக வருவேன்" என பதிலளித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











