அட்லீன்னாங்க... அவருன்னாங்க... இப்ப மலையாள இயக்குனரை டிக் செய்த ஷாரூக் கான்.
கொச்சி: பாலிவுட் நடிகர் ஷாரூக் கானை இயக்கப் போவதாக, மலையாள இளம் இயக்குனர் ஆஷிக் அபு தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகர் ஷாரூக் கான், கடைசியாக ஆனந்த். எல்.ராய் இயக்கியிருந்த ஸீரோ என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் ரிலீஸ் ஆன இந்தப் படம், எதிர்பார்த்த வெற்றியை தராததால், அடுத்தப் படத்தை உடனடியாக ஆரம்பிக்க வில்லை.

அட்லீ
நல்ல கதைகளில் நடிக்கலாம் என்று பல இயக்குனர்களிடம் கதை கேட்டிருந்தார். அதில் ஒருவர், நம்ம ஊர் அட்லீ! இருவரும் சேர்ந்து படம் பண்ணுவது உறுதியாகிவிட்டதாக தெலுங்கு இயக்குனர் ஒருவர் உறுதிப்படுத்தினார். ஆனால், ஷாரூக் தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கவில்லை.

வெற்றி மாறன்
இதற்கிடையே, தனது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடிய ஷாரூக் கான், சில இயக்குனர்களை அழைத்திருந்தார். அதில் அட்லீயும் வெற்றி மாறனும் கலந்துகொண்டனர். இந்நிலையில் இவர்கள் இயக்கும் படங்களில் ஷாரூக் கான் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், மவுனம் காத்தார், பாலிவுட் பாட்ஷா.

ராஜ் மற்றும் டீகே
இந்நிலையில் பாலிவுட் இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே இயக்கும் படத்தில் ஷாரூக் நடிக்கிறார் என்றும் ஆக்ஷன் காமெடி படமான இதன் ஷூட்டிங், அடுத்த வருடம் தொடங்குகிறது என்றும் செய்தி வெளியானது.

ஆஷிக் அபு
இந்நிலையில் மலையாள இயக்குனர் ஆஷிக் அபு, ஷாரூக் கான் படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார். இவர், டாடி கூல், சால்ட் அண்ட் பெப்பர், 22 ஃபீமேல் கோட்டயம், மாயநதி உட்பட சில மலையாளப் படங்களை இயக்கியுள்ளார்.

ரீமா கல்லிங்கல்
நடிகை ரீமா கல்லிங்கலின் கணவரான ஆஷிக் அபு, வைரஸ் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தை பார்த்த ஷாரூக், ஆஷிக் அபுவையும் கதாசிரியர் ஷியாம் புஷ்கரனையும் அழைத்துப் பேசினார். அப்போது இவர்கள் சொன்ன கதைப் பிடித்துப் போனதால் ஷாரூக் ஓகே செய்துள்ளார் .

ஆக்ஷன் டிராமா
ஆஷிக் அபு கூறும்போது, உண்மைதான். இது மலையாள ரீமேக் இல்லை. ஆக்ஷன் டிராமா கதை. இந்திக்காக உருவாக்கப்பட்ட கதை. ஷாரூக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











