ஷாருக்கான் மனைவி மீது பாய்ந்த புகார்.. 86 லட்சம் மோசடி என புலம்பும் நபர்.. என்ன நடந்தது?
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானின் மனைவி கவுரி கான் மீது மோசடி புகார் ஒன்று எழுந்துள்ளது. அதன் பேரில் போலீஸார் எஃப்.ஐ.ஆரையும் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த ஆண்டு ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் மீது குற்றம் இல்லை என ஷாருக்கான் தொடர்ந்து போராடிய நிலையில், அவர் சிக்கலில் இருந்து மீண்டார்.
இந்நிலையில், ஷாருக்கானின் மனைவி மீது நில மோசடி புகாரை மும்பையை சேர்ந்த ஜஸ்வந்த் ஷா என்பவர் கொடுத்துள்ளார்.

பதான் வெற்றியில் சந்தோஷமாக
ஃபேன், ஜீரோ என ஷாருக்கான் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த நிலையில், சினிமாவுக்கு சற்றே பிரேக் விட்டு நடித்தால் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் என கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு பதான் படத்தை ரிலீஸ் செய்தார் ஷாருக்கான். அந்த திரைப்படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. அந்த சந்தோஷத்தில் அடுத்த பட வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார் ஷாருக்கான்.

மகன் கைதால் மனவேதனை
பதான் திரைப்படம் கடந்த ஆண்டே வெளியாக வேண்டியது. ஆனால், போதைப் பார்ட்டியில் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் கலந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டது ஷாருக்கானை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அட்லீயின் பட அறிவிப்பை கூட வெகு நாட்களாக அறிவிக்காமல் இருந்தார் ஷாருக்கான்.

மனைவி மீது மோசடி புகார்
ஆர்யான் கானுக்கும் அந்த போதைப் பார்ட்டிக்கும் சம்பந்தமே இல்லை என்பதை நிரூபித்து அந்த வழக்கில் இருந்து மகனை மீட்டெடுத்தார் ஷாருக்கான். இந்நிலையில், ஷாருக்கானின் மனைவி கவுரி கான் மீது நில மோசடி புகார் ஒன்று பதிவாகி உள்ளது. மேலும், கவுரி கானுக்கு எதிராக 409 பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

86 லட்சம் மோசடி
லக்னோவில் உள்ள சுஷாந்த் கோல்ஃப் சிட்டியில் துல்சியானா கோல்ஃப் சிட்டி இடத்தை 86 லட்சத்துக்கு மும்பையை சேர்ந்த ஜஸ்வந்த் ஷா என்பவர் வாங்கி இருக்கிறார். ஆனால், அவருக்கு பதில், அந்த இடத்தை வேறொருவருக்கு விற்று விட்டது தெரிய வந்த நிலையில், இப்படியொரு புகாரை ஜஸ்வந்த் ஷா கொடுத்துள்ளார். கவுரி கான் அந்த கட்டுமான நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்
கவுரி கான் மட்டுமின்றி அந்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீதும் அந்த நபர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், இதில், கவுரி கான் மீது அவர் வழக்கு தொடர காரணமே, அவரது விளம்பரத்தை பார்த்துத் தான் அந்த இடத்தை அவர் வாங்கவே விருப்பப்பட்டதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











