Vijay - ‘அவர் பழைய மாதிரி இல்லைங்க’.. விஜய்யால் நொந்துபோன ஷாஜகான் நடிகர்
சென்னை: ஷாஜகான் படத்தில் நடிகர் விஜய்க்கு நண்பராக நடித்தவர் கிருஷ்ணா. அந்தப் படம் தவிர்த்து வேறு சில படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். இந்தச் சூழலில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் விஜய் குறித்து பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக விஜய்யை ஃபோன் மூலம் பிடிக்கவே முடியவில்லை என்று பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விஜய் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஷாஜகான். ரவி என்பவர் இயக்கிய அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதில் விஜய்க்கு நண்பராக கிருஷ்ணா என்பவர் நடித்திருந்தார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அவர் ஷாஜகான் படத்தை தவிர்த்து வேறு சில படங்களில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய் குறித்து பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கிருஷ்ணா பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்காக நான் வந்திருந்தேன். அப்போது நான் இருந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்தார். அதனை கேள்விப்பட்ட நான் அவரை பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். எனவே அவரது நம்பருக்கு ஃபோன் செய்து பேசிவிட்டு செல்லலாம் என்று நினைத்தேன்.
ஃபோன் செய்தேன்: விஜய்யின் நம்பர் என்னிடம் ஏற்கனவே இருந்தது. ஆனால் என்னமோ தெரியவில்லை அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனையடுத்து என்னுடைய மேலாளரின் மூலம் விஜய்யின் மேலாளருடைய நம்பரை வாங்கினேன். நம்பரை வாங்கிய பிறகு அந்த நம்பருக்கு தொடர்புகொண்டு நான் ஷாஜகான் படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்திருக்கிறேன். அவரிடம் ஐந்து நிமிடங்கள் பேச வேண்டும் என்று சொன்னேன்.
விஜய் கிடையாது: அதற்கு அவரோ நீங்கள் நினைப்பது போல் ஷாஜகான் சமயத்தில் இருந்த விஜய் இப்போது கிடையாது. அவருடைய இடமே வேறு. வேறு லெவலில் இருக்கிறார். அவரை நீங்கள் எல்லாம் பார்க்க முடியாது. அது எனக்கு ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. ஏனென்றால் நான் ஏதோ வெளியிலிருந்து வந்தவன் கிடையாது. விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறேன். அவருடைய சக நடிகனாக பணியாற்றியவர். அப்படி இருக்கும்போது அவரை பார்க்க முடியாது என்று சொன்னது எனது மனதை ரொம்பவே வருத்தம் அடைய செய்தது" என்றார்.
டாப் ஹீரோ விஜய்: விஜய் இப்போது கோலிவுட்டில் டாப் ஹீரோவாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது படங்கள் அசால்ட்டாக 100 கோடி ரூபாயை வசூலிக்கிறது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட 600 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூலித்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி டாப்பில் இருக்கும் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கட்சி 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











