திருமணம் செய்வதாகப் பழகி மோசடி முயற்சி.. பிரபல நடிகைக்குத் திடீர் மிரட்டல்.. 4 பேர் அதிரடி கைது!
கொச்சி: பிரபல நடிகையிடம் திருமணம் செய்வதாகப் பழகி, மிரட்டிப் பணம் பறிக்க முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல மலையாள நடிகை ஷாம்னா காசிம். அங்கு பல படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் பூர்ணா என்ற பெயரில் நடித்துவருகிறார்.
'மெட்டி ஒலி' திருமுருகன் இயக்கிய முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

லாக்டவுன் காரணமாக
தொடர்ந்து, வேலூர் மாவட்டம், வித்தகன், தகராறு, சகலகலா வல்லவன், கொடிவீரன், சவரக்கத்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது விஜய் இயக்கும் தலைவி படத்தில் சசிகலாவாக நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ள நடிகை பூர்ணா, லாக்டவுன் காரணமாக, கேரளாவின் கொச்சியில் உள்ள தனது வீட்டில் இருக்கிறார்.

பணம் கேட்டு மிரட்டல்
இந்நிலையில், பூர்ணாவின் அம்மா ரவ்லா, மராடு போலீஸ் நிலையத்தில் நேற்று திடீரென்று ஒரு புகாரை அளித்தார். அதில், சிலர் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தங்களை அழித்துவிடுவதாகக் கூறுவதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பூர்ணாவை மிரட்டிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:

நன்றாகப் பழகினர்
கடந்த சில நாட்களுக்கு முன் ரபீக் என்பவர் பூர்ணாவை போனில் தொடர்பு கொண்டுள்ளார். தான், நடிகை பூர்ணாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார். தனது போட்டோவை அனுப்புகிறேன் என்று கூறி, வேறொருவர் புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து ரபீக்கும் பூர்ணா வீட்டினரும் நன்றாகப் பழகிவிட்டனர்.

சந்தேகம் அடைந்தனர்
இதற்கிடையே, கடந்த 3 ஆம் தேதி நடிகை பூர்ணாவின் வீட்டுக்கு ரபீக் உட்பட 6 பேர் சென்றுள்ளனர். அங்கு திருமணம் பற்றி பேசுவதுபோல அவரது வீடு, வாகனம் உள்ளிட்டவற்றை வீடியோ எடுத்துவிட்டு வந்துவிட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், நடிகையிடம் ஒரு லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதனால் பூர்ணா குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். பணத்தைக் கொடுக்கவில்லை.

போலீசில் புகார்
அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டுள்ளனர். நடிகை தரப்பில் மறுத்துள்ளதை அடுத்து, மிரட்ட ஆரம்பித்தனர். பணம் தரவில்லை என்றால் அழித்துவிடுவோம் என்று கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பூர்ணாவின் அம்மா, போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்து திருச்சூரைச் சேர்ந்த ரபீக், சரத், அஸ்ரஃப், ரமேஷ் ஆகியோரை கைது செய்துள்ளோம்.
Recommended Video

பணம் பறிக்கும் கும்பல்
இன்னும் சிலரைத் தேடி வருகிறோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். இதுபற்றி நடிகை பூர்ணா கூறும்போது, இது போன்ற பணம் பறிக்கும் கும்பல் பற்றி மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதால் புகார் அளித்துள்ளோம் என்று கூறியுள்ளார். நடிகை ஒருவர், ஒரு கும்பல் மிரட்டி பணம் பறிக்க முயன்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











