Game Changer Box Office: எடுபட்டதா ஷங்கரின் பிரமாண்டம்? வசூலில் வேட்டையாடும் ராம் சரணின் கேம் சேஞ்சர்
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேம் சேஞ்சர், இந்தப் படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் பொங்கலை முன்னிட்டு நேற்று அதாவது, ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படம் நேரடித் தெலுங்குப் படமாக உருவாகி இருந்தாலும், ஷங்கர் தமிழ் சினிமாவைச் சார்ந்த இயக்குநர் என்பதால், தமிழிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் வெளியாகி ரசிகர்கள் தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதி, அதை ஷங்கர் இயக்கத் திட்டமிட்டு அதன் பின்னர் உருவாகியுள்ள படம்தான் கேம் சேஞ்சர். படத்தினை தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் ஆதித்யாராம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். படத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் உருவாக்க மட்டும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ரூபாய் 75 கோடிகளுக்கு மேல் செலவு செய்ததாக, படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் படக்குழு தெரிவித்தது. ஷங்கரின் முந்தைய படமான இந்தியன் 2 படம் பாக்ஸ் ஆஃபிஸில் மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் படுதோல்விப் படமாக மாறியது.

இப்படியான நிலையில் கேம் சேஞ்சர் படம் ஷங்கரை மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாற்றுமா என்ற கேள்வி ரசிகர்களுக்கு இருந்தது. இப்படியான நிலையில், கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்திற்கு இருவேறு கருத்துகள் பெரும்பான்மையாக ரசிகர்கள் தரப்பில் முன் வைக்கப்படுகின்றது. அதாவது, படத்தினைப் பார்த்த தெலுங்கு ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடி வருகின்றனர். அதேநேரத்தில் படம் தமிழிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டு ரசிகர்கள், படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை, ஷங்கர் தன்னுடைய படத்தையே மீண்டும் எடுத்து வைத்துள்ளார் என விமர்சிக்கின்றனர்.
கதை: படத்தின் கதையைப் பொறுத்தவரையில், ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும் இடையில் நடக்கும் மோதல்தான். முதல் பாதியில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கும் ராம் சரண், இரண்டாம் பாதியில் தேர்தல் அதிகாரியாகின்றார். அதன் பின்னர் அரசியல்வாதியாக உள்ள எஸ்.ஜே. சூர்யாவுக்கும் ராம் சரணுக்கும் ஏற்படும் மோதல்தான் மீதிக் கதை. ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் அரசியல்வாதிகளுக்கும் மற்றவர்களுக்கும் நடைபெறும் மோதல்கள் குறித்து, பல படங்களில் பார்த்துவிட்டதால், இந்தப் படத்தினைப் பார்க்கும்போதும் அதே சாயல் தெரிவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஏமாற்றம்: இந்தக் கதைக்கு கதாநாயகி எதற்காக உள்ளார் எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது மட்டும் இல்லாமல், ஷங்கரது தீவிரமான ரசிகர்கள், படத்தை பார்த்துவிட்டு, தங்களது ஏமாற்றங்களை வெளியே சொல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். படத்தில் ராம் சரணின் நடிப்பு சிறப்பாக இருப்பதாக பலர் கூறுகின்றர். அதேபோல், எஸ்.ஜே. சூர்யா எப்போதும் ஹைபிச் மாடுலேசனிலேயே நடித்து வருகின்றார், அவர் அதிலிருந்து வெளியே வந்து, வேரியேஷன்ஸ் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
வசூல்: படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியாக தெலுங்கில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் சுமார் 52 கோடிகளை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் படம் எப்படியும் ரூபாய் 75 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்திருக்கும் என கூறப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வசூல் கணக்கு என்பது, படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வசூல் கணக்கு இல்லை. எனவே வாசகர்கள், இதனை படத்தின் அதிகாரப்பூர்வ வசூல கருதவேண்டாம். மேலும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள வசூல் என்பது, தோராயக் கணக்குதான்.


Click it and Unblock the Notifications











