Manobala Death - ஷங்கர் முதல் லோகேஷ் கனகராஜ்வரை - மனோபாலா வீட்டுக்கு படையெடுத்த பிரபலங்கள்
சென்னை: Manobala Death (மனோபாலா மரணம்) மனோபாலாவின் உடலுக்கு ஷங்கர், லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மனோபாலா. அவரிடம் பல படங்கள் பணியாற்றிய அவர், ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜயகாந்த்தை வைத்து சிறைப்பறவை, மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும், ரஜினிகாந்த்தை வைத்து ஊர்க்காவலன் என 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்களை இயக்கியிருக்கிறார் மனோபாலா.

நடிகரான மனோபாலா: இயக்கத்தைத் தொடர்ந்து மனோபாலா நடிப்பிலும் கவனம் செலுத்திவந்தார். அப்படி அவர் நடித்த பல கதாபாத்திரங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. தற்போது உருவாகிவரும் லியோ, இந்தியன் 2 உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவருக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால் சிகிச்சை எடுத்துவந்தார்.
உயிரிழந்த மனோபாலா: அப்போலோவில் முதலில் சிகிச்சை எடுத்துவந்த அவர் பிறகு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

ஷங்கர் அஞ்சலி: அந்தவகையில் இயக்குநர் ஷங்கர் சாலிகிராமத்திற்கு நேரில் வந்து மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மனோபாலா இறப்பு செய்தி எனக்கு மிகப்பெரிய ஷாக்காக இருக்கிறது. மிகச்சிறந்த கலைஞர் அவர். எனது நெருங்கிய நண்பரும்கூட. இந்தியன் 2 படத்திலும் அவர் நடித்திருக்கிறார். படத்தில் அவருக்கு வெறும் காமெடி கேரக்டராக மட்டும் அவருக்கு கொடுக்கவில்லை.
முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டராக இருக்கும். சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் படத்தை பார்ப்பதற்குத்தான் அவர் இப்போது இல்லை. அவரது நீளமான முடியை எக்காரணம் கொண்டும் வெட்ட மாட்டேன் என்ற பிடிவாதத்தில் இருந்தார். ஆனால் இந்திய 2 படத்தில் அவரது கேரக்டருக்காக நான் கோரிக்கை வைத்ததும் முடியை வெட்டிக்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். அதேபோல் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜும் நேரில் வந்து மனோபாலாவின் உடலுக்கு தனது அஞ்சலியை செலுத்தினார்.

விஜய் சேதுபதி: அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி நள்ளிரவு மனோபாலா உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, தனக்கு இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி தருகிறது எனவும், மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் சோகத்தோடு கூறினார். சமுத்திரகனியும் நேரில் சென்று மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பாக்யராஜ் இரங்கல்: முன்னதாக, இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் மனோபாலா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், "மனோபாலா நெருக்கமான நண்பர். கடின உழைப்பாளி. இயக்குநராக நிறைய படங்கள் எடுத்துள்ளார். புதிய வார்ப்புகள் படத்தை சுட்டி காட்டி பேசியவர், எப்போதும் அவரை சுற்றி கலகலப்பாக இருக்கும். சினிமாவில் நடிகராக, யூனியன் ஆபிசில் உறுப்பினராக என எல்லாவற்றிலும் இருப்பவர்.
அவர் இழப்பு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். எல்லோரிடமும் நட்போடு பழக கூடியவர். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











