ஷங்கரின் அடுத்த படத்தில் தனுஷ்…
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் எதார்த்த நடிகர் என்று பெயர் பெற்றுள்ள தனுஷ் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாமனார் ரஜினியை வைத்து இயக்கிய ஷங்கர் மருமகன் தனுஷ் உடன் அடுத்த படத்தில் இணைய இருக்கிறார். அறிமுக இயக்குநர்கள் படங்களிலும், அண்ணனின் படங்களிலும் மட்டுமே நடித்த தனுஷ் முதல் முறையாக பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் இணைய இருக்கிறார்.
'ஐ' படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருக்கும் ஷங்கர், தனுஷ் உடன் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில் அதிகாரப்பூர்வமாக யாரும் மூச்சு கூட விடவில்லை.

ஷங்கரின் கதாநாயகர்கள்
இயக்குநர் ஷங்கர் இதுவரை அர்ஜூன், கமல், விக்ரம், பிரசாந்த் ஆகியோரை வைத்து இயக்கியுள்ளார். பாய்ஸ் படத்தில் சித்தார்த், பரத் என அறிமுக நடிகர்களை நடிக்க வைத்தார். அதற்குப்பின்னர் ரஜினியை வைத்து இரண்டு படம் இயக்கிய ஷங்கர், ‘ஐ' படம் மூலம் விக்ரமுடன் இணைந்தார். தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு தனுஷை புக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏ.ஜி.எஸ் தயாரிக்கிறது?
இந்தப் படத்தை தயாரிக்கப் போவது, ஏ.ஜி.எஸ். நிறுவனம். இதற்காக பெரிய தொகை ஒன்றையும் ஒதுக்கியுள்ளதாம் தயாரிப்பு நிறுவனம். ஆகஸ்ட்டில் இருந்து படப்பிடிப்பு தொடங்கிவிடும் எனவும், படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்றும் சொல்லப்படுகிறது.

555 கேசட் வெளியீட்டு விழா
இதனிடையே சசி இயக்கத்தில் பரத் நடித்துள்ள 555 படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா ஏப்ரல் 15ம் தேதி நடைபெறுகிறது. இந்த படத்தின் கேசட்டினை இயக்குநர் ஷங்கர் வெளியிட தனுஷ் பெற்றுக்கொள்கிறார். இதுவே இருவரும் இணையப்போவதற்கான முன்னோட்டம் என்றும் திரை உலகில் பேசிக் கொள்கின்றனர்.

வெறும் வதந்தியா?
அதே சமயம் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் சி.இ.ஒ அர்ச்சனா கல்பாத்தி, ஷங்கர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்திதான் என்றும் கூறியுள்ளார். எது எப்படியோ ஷங்கரின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகும் போது யார் நடிகர் என்பது தெரியாமலா போய்விடும் என்று கிசு கிசுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











