கியாரா அத்வானிக்கு வாழ்த்து சொன்ன ஷங்கரின் RC 15 டீம்... இதுலகூட இப்படியொரு பிரம்மாண்டமா..?
ஹைதராபாத்: கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக் திரைப்படத்தில் நடித்து மிகப் பெரிய அளவில் பிரபலமானவர் கியாரா அத்வானி.
கியாரா அத்வானிக்கும் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் கடந்த 7ம் தேதி திருமணம் நடைபெற்றது.
ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ராவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர் பங்கேற்றனர்.
இந்நிலையில், கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்து வரும் ஆர்சி 15 படக்குழுவினர் அவர்களுக்கு திருமண வாழ்த்துக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

பாலிவுட் ஜோடி திருமணம்
சுஷாந்த் சிங் நடித்த தோனியின் பயோபிக்கான 'எம்.எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் சாக்ஷியாக நடித்திருந்தார் கியாரா அத்வானி. இந்தப் படம் அவரை மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது. இதனைத் தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வரும் கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ராவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. சித்தார்த் மல்ஹோத்ராவும் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது. காதல் செய்திகளை அவர்கள் இருவரும் மறுத்து வந்த நிலையில், திடீரென கடந்த 7ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

ஜெய்ப்பூரில் கூடிய நட்சத்திரங்கள்
ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர், ஏக் வில்லன் உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் சித்தார்த் மல்ஹோத்ரா. கியாரா அத்வானியும் சித்தார்த் மல்ஹோத்ராவும் ஷெர்ஷா' படத்தில் இணைந்து நடித்தபோதே காதலிக்கத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இருவருக்கும் பிப்ரவரி 7ம் தேதி ராஜஸ்தானில் உள்ள ஜெய் சாலிமர் பேலஸ் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இதில் கரன் ஜோஹர், ரோஹித் ஷெட்டி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதேபோல் இருவரது குடும்ப உறுப்பினர்களும் நெருங்கிய நண்பர்களும் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆர்சி 15 படக்குழுவினர் வாழ்த்து
கியாரா - சித்தார்த் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. திருமணம் முடிந்த கையோடு காதல் மனைவி கியாரா அத்வானியை டெல்லிக்கு அழைத்துச் சென்றார் சித்தார்த். மேலும், தன் காதல் மனைவிக்காக மும்பையில் ரூ.70 கோடி மதிப்பில் பிரம்மாண்ட பங்களா ஒன்றையும் கட்டி வருகிறாராம் சித்தார்த். அதன் வேலைகள் முடிந்ததும், அந்த கடலோர பங்களாவில் தான் இருவரும் குடியேறபோகிறார்களாம். இந்நிலையில், கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினருக்கு ஷங்கரின் ஆர்சி 15 படக்குழுவினர் வாழ்த்துக் கூறியுள்ளனர்.

இதுலகூட இப்படியொரு பிரம்மாண்டமா?
கியாரா அத்வானி தற்போது ஷங்கரின் ஆர்சி 15 படத்தில் நடித்து வருகிறார். தில்ராஜூ தயாரிப்பில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் ஆர்சி 15 விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தான் கியாராவின் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து ஷங்கர் ராம் சரண், தில் ராஜூ உள்ளிட்ட ஆர்சி 15 படக்குழுவினர் காதல் தம்பதியினருக்கு பிரம்மாண்டமாக வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

ட்ரெண்டாகும் வீடியோ
இந்த வீடியோவில் ஷங்கர், ராம் சரண், தில் ராஜூ உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் ஒரு கேமரா முன்னர் நின்று மலர் தூவி வாழ்த்துக் கூறுகின்றனர். க்ளோஸப்பாக இருந்து பின்னர் ஒரேஷாட்டில் வைல்ட் ஆக செல்லும் கேமராவில் ஆர்சி 15 டீம் மொத்தமும் இருப்பது பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. தனது படத்தின் பாடல் காட்சிகளைப் போல இந்த வாழ்த்து வீடியோவையும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளார் ஷங்கர். இந்த வீடியோ டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அதேநேரம் கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணத்தின் ஓடிடி ஒளிபரப்பு உரிமையை அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











