மத கஜ ராஜாவிடமே மண்டியிட்ட கேம் சேஞ்சர்.. 4 நாட்கள் ஆகியும் ஷங்கர் படம் செல்ஃப் எடுக்கலையே!
சென்னை: உலகம் முழுவதும் கேம் சேஞ்சர் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருவதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தாலும் அதையெல்லாம் நம்ப முடியாது என பல பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்களும் படத்தின் வசூல் அறிவிப்பில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று வருவதாக கூறிவருகின்றனர். டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் கேம் சேஞ்சர் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் ஷங்கர் இயக்கிய அந்த படத்துக்கு போதிய வரவேற்பு இல்லை என்பது தான் அதிர்ச்சியை அளிக்கிறது.
ஜனவரி 10ம் தேதியே பொங்கல் பண்டிகையை பக்காவாக குறி வைத்து கேம் சேஞ்சர் திரைப்படமும் பாலாவின் வணங்கான் படமும் வெளியாகின. இதில், தமிழ்நாட்டில் 2 படங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஓரளவு வசூலை மட்டுமே அள்ளி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், விஷாலின் மத கஜ ராஜா வணங்கான் படத்தை மட்டுமின்றி ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் வசூலையும் தமிழ்நாட்டில் ஓவர்டேக் செய்துவிட்டதாக வெளியான தகவல் தான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியன் 2 படத்தால் வந்த வினை: ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ஜெயராம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் படத்துக்கு மிகப்பெரிய ஓபனிங் மற்ற மாநிலங்களில் கிடைக்காமல் போக காரணமே கடந்த ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படம் பார்த்த வேலை தான் என்கின்றனர். அந்த படம் ட்ரோல் மெட்டீரியலாக மாறிய நிலையில், ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தையும் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை.
கேம் சேஞ்சர் தமிழ்நாடு வசூல்: கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியான கேம் சேஞ்சர் 13ம் தேதியான நேற்று வரை தமிழ்நாட்டில் மிகவும் குறைவான வசூலையே அள்ளியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக படம் வெளியான 4 நாட்களில் 6 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருப்பதாக கூறுகின்றனர். ஆனால், கேம் சேஞ்சர் படத்தின் தமிழ்நாடு வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் vs சுந்தர். சி: விஷால் நடிப்பில் வெளியான மத கஜ ராஜா படம் வசூலில் மிரட்டி வரும் நிலையில், சுந்தர். சி vs ஷங்கர் மீம்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. கடந்த ஆண்டும் சுந்தர். சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் குறைவான பட்ஜெட்டில் உருவாகி 100 கோடி வசூல் ஈட்டியது. ஆனால், இந்தியன் 2 திரைப்படம் ஃபிளாப் ஆனது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











