பெண்களே நடத்தும் 'ஷி டாக்சி' சேவை- நடிகை மஞ்சுவாரியார் தொடங்கி வைத்தார்
திருவனந்தபுரம்: முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் டாக்சி சேவையை நடிகை மஞ்சு வாரியார் தொடங்கி வைத்தார்.
கேரள மாநில அரசின் சமூக நீதி துறையின் கீழ், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புக்காக 'ஜென்டர் பார்க்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் முதல் நடவடிக்கையாக, பெண்களால், பெண் பயணிகளுக்காக நடத்தப்படும் டாக்சி சேவையான 'ஷி டாக்சி' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவையின் தொடக்க விழா நேற்று திருவனந்தபுரம் அருகே கனகக்குன்னு என்ற இடத்தில் நடந்தது.
விழாவில் நடிகை மஞ்சு வாரியார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சேவையை தொடங்கி வைத்தார். அதன்படி 5 பெண் டிரைவர்களிடம், கார்களுக்கான சாவியை அவர் வழங்கினார். விரைவில் இந்த டாக்சிகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
நிகழ்ச்சியில் மாநில பஞ்சாயத்து மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் எம்.கே.முனீர், முரளீதரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்சி சேவையை தொடங்கி வைத்ததும் தனது குடும்பத்துடன் அமைச்சர் எம்.கே.முனீர் டாக்சி ஒன்றில் பயணம் செய்தார். அதில் நடிகை மஞ்சு வாரியாரும் பயணம் மேற்கொண்டார்.
24 மணி நேரமும் இயங்கும் இந்த டாக்சி சேவைக்கு சிறப்பு சேவை மையமும் (கால் சென்டர்) தொடங்கப்பட்டுள்ளது.
இந்த டாக்சிகளை ஓட்டும் பெண்களுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
'இனி நள்ளிரவில் பயணம் செய்ய வேண்டி வந்தாலும் பெண்கள் சற்றும் தயக்கமின்றி இந்த ஷி டாக்சிகளில் பயணம் செய்ய முடியும். பெண்களுக்கு பாதுகாப்பும் நம்பிக்கையும் நிச்சயம்', என்று இதில் பயணம் செய்த பயணிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











