புன்னகை மன்னன் முதல் காத்துவாக்குல ரெண்டு காதல் வரை.. மறைந்த ஷிஹான் ஹூசைனியின் திரைப்பயணம்!
சென்னை: கராத்தே வீரர் ஷிஹான் ஹூசைனி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 64. கடந்த சில நாட்களாகவே புற்றுநோய்க்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வந்த அவர், தான் பிழைக்க மாட்டோம் என்பதை அறிந்துக் கொண்டு தனது உடலையும் தானம் செய்தது அனைவரையும் கண்ணீர் மல்க செய்தது.
ஷிஹான் ஹூசைனிக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தனது கராத்தே திறமை மூலம் பல கராத்தே மாணவர்களை உருவாக்கி வந்த ஷிஹான் ஹூசைனி சினிமாவிலும் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான்.

விஜய் நடித்த பத்ரி படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் ரொம்பவே பேசப்பட்டது. அந்த படத்தில் மட்டுமின்றி ஷிஹான் ஹூசைனி பல தமிழ் சினிமாக்களில் நடித்துள்ள நிலையில், அவர் குறித்த ஒரு சின்ன பயோவை இங்கே பார்க்கலாம்.
புற்றுநோய்க்கு பலியான புன்னகை மன்னன் நடிகர்: 1959ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மதுரையில் பிறந்து வளர்ந்தவர் தான் ஷிஹான் ஹூசைனி. கராத்தே மாஸ்டராக மாறி மாணவர்களுக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகளை சொல்லி வந்த அவருக்கு பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த புன்னகை மன்னன் படத்தில் இலங்கை தமிழராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1986ம் ஆண்டு அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான ஷிஹான் ஹூசைனி புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார்.
ரஜினிகாந்துடன் 2 படங்கள்: கமல்ஹாசனின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமான ஷிஹான் ஹூசைனி அடுத்ததாக ரஜினிகாந்த் நடித்த வேலைக்காரன் படத்திலும் ஒரு சிறிய ரோலில் நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த ஆங்கில படமான பிளட் ஸ்டோன் படத்திலும் இவர் நடித்துள்ளார். அதன் பின்னர், ராம்கியின் பறவைகள் பலவிதம், கார்த்திக் நடித்த உன்னை சொல்லி குற்றமில்லை, சரத்குமாரின் வேடன் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
பத்ரி படத்தை மறக்க முடியுமா?: அருண் பிரசாத் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளியான விஜய் நடித்த பத்ரி படத்தில் பாக்ஸிங் பயிற்ச்சியாளராகவே ஹூசைனி நடித்திருப்பார். அந்த படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய பிரபலமும் கிடைத்தது. ஆனால், அதன் பின்னர், சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டு கராத்தே பயிற்சி அளிப்பதில் மட்டுமே கவனமாக செயல்பட்டு வந்தார்.
கடைசி படம்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2022ம் ஆண்டு வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் கராத்தே பயிற்சியாளராக நடித்திருந்தார். ஹூசைனி நடிப்பில் வெளியான கடைசி படம் என்றால் கடந்த ஆண்டு வைபவ் நடித்த சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படம் தான். இதுதவிர கலர்ஸ் தமிழில் 2022ம் ஆண்டு ஒளிபரப்பான வெல்லும் திறமைகள் ரியாலிட்டி ஷோவில் நடுவராக செயல்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்த ஹூசைனி காலமான செய்தி அனைரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விஜய் அஞ்சலி செலுத்த வருவாரா? என்கிற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











