இயக்குனர் விஜய் மில்டனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் லுக் அப்டேட் வெளியானது!
சென்னை : கோலி சோடா மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக பலராலும் அறியப்பட்டவர் இயக்குனர் விஜய் மில்டன்.
பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள இவர் விக்ரம் நடிப்பில் உருவான 10 என்றதுக்குள்ள என்ற சூப்பர் ஹிட் படத்தையும் இயக்கியவர்.
கோலி சோடா பாகம் 2 க்கு பிறகு கன்னடத்தில் முன்னணி நடிகரின் திரைப்படத்தை இயக்க உள்ளார் அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் லுக் அப்டேட் இப்பொழுது வெளியாகியுள்ளது.

இயக்குனராக அறிமுகமானார்
விஜய்யின் பிரியமுடன் திரைப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான விஜய் மில்டன் அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 2006 இல் வெளியான அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமானார். பரத் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் காதலைக் கூறியிருந்த இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இயக்குனர் சேரன் இப்படத்தை தயாரித்திருந்தார்.

மிகப்பெரிய ஹிட்
2014 இல் மீண்டும் கோலிசோடா என்ற படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்த விஜய் மில்டன் தொடர்ந்து படங்களை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது . கோலிசோடா வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் பல நாட்கள் வெற்றிநடை போட்டது. கோலிசோடா மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவான 10என்றதுக்குள்ள என்ற ஆக்சன் படத்தை இயக்கி பட்டையை கிளப்பி இருந்தார்.

சிம்புதேவனின் கசடதபற
இது மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். கடைசியாக கடுகு மற்றும் கோலிசோடா 2 உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தவர் சிம்புதேவனின் கசடதபற, பாலாஜி சக்திவேலின் யார் இவர்கள் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

ஃபர்ஸ்ட் லுக் ஜூலை 10
இந்த நிலையில் கன்னடத்தில் முன்னணி நடிகராக உள்ள சிவராஜ்குமாரின் 123வது படத்தை விஜய் மில்டன் இயக்க இருப்பது உறுதியாகி உள்ளது. பக்கா ஆக்சன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூலை 10 ஆம் தேதியும், டைட்டில் லுக் ஜூலை 12ஆம் தேதி கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரால் வெளியிடப்பட உள்ளது. கிருஷ்ணா கிரியேசன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications











