ஆந்திர அரசியல்வாதியைச் சந்தித்த சூப்பர் ஸ்டார் பட நடிகர்.. எல்லார் கண்ணும் அந்த நடிகர் மேலதான் போல
பெங்களூரு: கன்னட நடிகர் சிவராஜ்குமார் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தற்போது ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார். அண்மையில் அவர் புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை செய்தார். அதன் பின்னர் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். இப்படி இருக்கும்போது இவரது நட்ப்பில் உருவாகி வரும் படம் பெட்டி. இந்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
ரஜினிகாந்துடன் 'ஜெயிலர்' திரைப்படத்தில் 'நரசிம்மா' கதாபாத்திரத்தில் மிரட்டிய பிறகு, தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகத்தில் இருந்து கணிசமான வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகின்றன. தெலுங்கில் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள சிவராஜ்குமார், ராம் சரண் நடிக்கும் 'பெட்டி' படத்தில் சிறப்பு கதாபாத்திரத்திலும், சிபிஐயின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கும்மடி நரசையாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் 'கும்மடி நரசையா' என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.
தற்போது 'பெட்டி' படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ள சிவராஜ்குமார், கும்மடி நரசையாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். மேலும், தனது மனைவி கீதாவுடன் விஜயவாடாவில் உள்ள கனகதுர்கம்மா கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். அண்மையில் ஊடகங்களிடம் பேசிய நடிகர் சிவராஜ்குமார், "ராம் சரண் நடிக்கும் 'பெட்டி' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அது ஒரு சிறப்பான கதாபாத்திரம். அத்துடன், ஒரு நேரடி தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளேன், அது கும்மடி நரசையாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம்.
"கனகதுர்கம்மா கோயிலுக்குச் சென்று அம்மனை வழிப்பட்டது நல்ல புத்துணர்வைக் கொடுத்தது. இந்த நல்ல புத்துணர்வுடன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். ஒரு நல்ல மனிதரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படத்தில் நடிக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இத்தகைய மனிதாபிமானமிக்க ஒருவரின் கதையை இக்காலத்தில் அனைவரும் அறிய வேண்டும்," எனக் குறிப்பிட்டார்.

குடும்பம்: டாக்டர் ராஜ்குமார் குடும்பத்திற்கும், நந்தமூரி குடும்பத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே நெருங்கிய நட்பு உண்டு. என்.டி.ஆர் மற்றும் டாக்டர் ராஜ்குமார் காலத்திலிருந்தே இந்த நட்பு தொடர்ந்து வருகிறது. பாலய்யாவும் சிவராஜ்குமாரும் சகோதரர்கள் போல் பழகி வருகிறார்கள்.
பாலய்யா: இது குறித்து சிவராஜ்குமார் கூறுகையில், "பாலய்யா எனக்கு சகோதரர் போன்றவர். நாங்கள் மிகவும் நெருக்கமாகவும், ஒரே குடும்பத்தினர் போலவும் உள்ளோம். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், சந்திரபாபு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆந்திர உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்," என்று தெரிவித்துள்ளார். உபேந்திரா இயக்கத்தில் சிவராஜ்குமார் நடித்த 'ஓம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், தெலுங்கில் ரீமேக்கும் செய்யப்பட்டது. 'ஓம் 2' எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு, "உபேந்திராவிடம் கதை உருவாக்கும்படி நான் கூறி வருகிறேன். அனைத்தும் கைகூடி வந்தால், நிச்சயம் நாங்கள் அதை செய்வோம்," என்று சிவராஜ்குமார் பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications











