மூன்று தோற்றமாமே.. கன்னட சூப்பர் ஸ்டாரை இயக்குகிறார் விஜய் மில்டன்.. அஞ்சலி ஹீரோயின்!
சென்னை: கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கும் படத்தை இயக்குகிறார், விஜய் மில்டன்.
பிரியமுடன், சாக்லேட், சாமுராய், ஆட்டோகிராப், காதல், வழக்கு எண் 18/9 உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், விஜய் மில்டன்.
'அழகாய் இருக்கிறாய் பயமாக இருக்கிறது' என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

10 எண்றதுக்குள்ள
அடுத்து கோலிசோடா படத்தை இயக்கினார். சமூகத்தில் கவனிக்கப்படாத கேரக்டர்களை மையமாக்கி உருவான இந்தப் படம் ஹிட்டானது. அடுத்து விக்ரம் நடித்த 10 எண்றதுக்குள்ள, கடுகு, கோலிசோடா 2 படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் கவனிக்கப்பட்டன. அடுத்து விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தை இயக்கப் போவதாகக் கூறப்பட்டது.

டாலி தனஞ்செயா
இந்நிலையில், அவர் கன்னடப் படத்தை இயக்குகிறார். இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஹீரோவாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக டாலி தனஞ்செயா நடிக்கிறார். அஞ்சலி ஹீரோயின். பிருத்வி அம்பார், உமாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தை ரஃப்நோட் நிறுவனம், கிருஷ்ணா கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

சமஸ்கிருத கல்லூரி
எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி.விஜய்மில்டன். ஜெ.அனூப் சீலின் இசையமைக்கிறார். இதன் பூஜை பெங்களூரில் நேற்று நடந்தது. வரும் 23 ஆம் தேதி முதல் பெங்களூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் ஷூட்டிங் தொடங்குகிறது.

மூன்று வேடங்கள்
படப்பிடிப்பு பெங்களூரில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். பூஜையின் போது எடுத்த செல்பி புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சிவராஜ்குமார், படப்பிடிப்புக்கு மீண்டும் திரும்பி விட்டேன் என்று கூறியுள்ளார். இது சிவராஜ்குமாரின் 123 வது படம். இதில் மூன்று தோற்றங்களில் அவர் வருகிறார்.

மீண்டும் இணைகின்றனர்
வழக்கமான கதையாக இது இருக்காது, புதுவிதமான ரசனையை இந்தப் படம் தரும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். 'தகரு' என்ற கன்னட படத்துக்குப் பிறகு தனஞ்செயாவும் சிவராஜ்குமாரும் இந்தப் படத்தில் மீண்டும் இணைகின்றனர். இதற்குப் பிறகு பிரபுதேவாவுடன் சிவராஜ்குமார் இணைகிறார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











