கண் விழித்தபோது என் மகன் உயிருடன் இல்லையே: குழந்தை நட்சத்திரத்தின் அப்பா கண்ணீர்
ராய்பூர்: விபத்தில் சிக்கி மறுநாள் கண் விழித்தபோது எங்களின் ஒரே மகன் இறந்துவிட்டான் என்று கூறினார்கள் என குழந்தை நட்சத்திரமான ஷிவ்லேக் சிங்கின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் ஷிவ்லேக் சிங்(14). சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அவர் தனது தந்தை ஷிவேந்திர சிங் மற்றும் தாய் லேக்னாவுடன் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்தார்.

கடந்த 18ம் தேதி ஷிவ்லேக் தனது பெற்றோருடன் பிலாஸ்பூரில் இருந்து ராய்பூருக்கு காரில் சென்றபோது அவர்களின் வாகனம் எதிரே வந்த டிரக் மீது மோதியது. இதில் ஷிவ்லேக் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அவரின் பெற்றோர் மற்றும் டிரைவர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஷிவேந்திர சிங் மற்றும் லேக்னா மறுநாள் தான் கண் விழித்தனர். அதன் பிறகே தங்களின் ஒரே மகன் இறந்த செய்தி அவர்களுக்கு தெரிய வந்தது.
இது குறித்து ஷிவேந்திர சிங் கூறியதாவது,
ஒரு வேலையாக பிலாஸ்பூர் சென்றிருந்தோம். மீடியாவை சந்திக்க செல்லவில்லை. அதன் பிறகு அங்கிருந்து ராய்பூரில் உள்ள எங்களின் வீட்டிற்கு கிளம்பினோம். அத்துடன் எல்லாமே முடிந்துவிட்டது.
டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. நானும், என் மனைவியும் சுயநினைவை இழந்தோம். கண் விழித்தபோது எங்கள் மகன் உயிருடன் இல்லை. அவன் டிரைவர் அருகில் கூட அமரவில்லை. அப்படி இருக்கும்போது அவன் மீது என்ன பட்டு உயிர் போனது என்று தெரியவில்லை.
டிரக் டிரைவரின் கவனக்குறைவால் தான் இந்த விபத்து ஏற்பட்டது. அவரை கைது செய்துவிட்டார்களா என்று தெரியவில்லை. ஷிவ்லேக் எங்களின் ஒரே மகன் என்றார்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய டிரக் டிரைவரை தேடி வருகிறார்கள். ஷிவ்லேக் சிங்குடன் சேர்ந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர்களால் அவர் இறந்துவிட்டார் என்பதையே இன்னும் நம்ப முடியவில்லை. எங்களுக்கே இப்படி என்றால் அவரின் பெற்றோர் நிலையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











