அவதார் 2 டிரைலரே லீக் ஆகிடுச்சு.. அதிர்ச்சியில் ஜேம்ஸ் கேமரூன்.. உடனடியாக என்ன பண்ணாங்க தெரியுமா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 படத்தின் டிரைலர் வரும் மே 6ம் தேதி டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்துடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், திடீரென அவதார் பட டிரைலர் காட்சிகள் வெளியாகி, படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்நிலையில், ஒட்டுமொத்த 3 நிமிட டிரைலர் காட்சியே வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்டம்
டெர்மினேட்டர் படங்கள் மூலம் அர்னால்டை ஹியூமனாய்டு ரோபோவாக உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஜேம்ஸ் கேமரூன். ஏலியன் படம் எடுத்து அனைவரையும் அச்சப்பட வைத்த இவர், இயக்கத்தில் வெளியான டைட்டானிக் திரைப்படம் காதல் காவியமாக உலகம் முழுவதும் பேசப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு மனிதர்களையும் தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்து இவர் செய்த புதுமையான முயற்சி தான் அவதார் திரைப்படம்.

நம்பர் ஒன் வசூல்
அவதார் முதல் பாகம் வெளியாகி உலகம் முழுவதும் 25 ஆயிரம் கோடி வசூல் செய்து இமாலய சாதனையை படைத்தது. அதன் வசூலை முறியடிக்க மார்வெல் தயாரிப்பு நிறுவனம் பல சூப்பர் ஹீரோக்கள் படங்களை தயாரித்து, ஒட்டுமொத்த சூப்பர் ஹீரோக்களையும் ஒன்றிணைத்து அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை கொடுத்தும் முடியாத நிலையில், அதனை ரீ ரிலீஸ் செய்து அவதார் வசூல் சாதனையை 10 ஆண்டுகளுக்கு பிறகு போராடி முறியடித்தது.

அவதார் 2
அவதார் படத்தை முடித்த கையோடு அவதார் 2 படத்தை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கொடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், 12 ஆண்டுகள் ரசிகர்களை காக்க வைத்து விட்டார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவதார் 2ம் பாகம் வெளியாகும் என அறிவித்துள்ளார். மேலும், அடுத்தடுத்த பாகங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியாகும் என்றும் அவதார் 4 வரை ரிலீசாகும் என அறிவித்துள்ளார்.

லீக்கான டிரைலர்
வரும் மே 6ம் தேதி வெளியாகும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்துடன் அவதார் படத்தின் டிரைலரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவதார் படத்தின் ஒட்டுமொத்த டிரைலரும் வெளியாகி படக்குழுவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அவதார் 2 டிரைலர் ஸ்டில்கள் லீக்கான நிலையிலேயே கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். இந்நிலையில், அத்தனையையும் மீறி அவதார் 2 டிரைலர் லீக் ஆகி உள்ளது.

எப்படி இருக்கு
Avatar The Way Of Water எனும் தலைப்பில் உருவாகி உள்ள அவதார் 2ம் பாகத்தின் டிரைலர் முழுக்க தங்களது குடியிருப்பை போரில் இழந்த அவதார் வாசிகள் புதிதாக நீர் நிலைகளில் வாழ தங்களை பழக்கிக் கொள்கின்றனர். அங்கே அவர்களுக்கு என்ன விதமான ஆபத்து வருகிறது. பறக்கும் மீன்களுக்கு மேல் சவார் செய்து ஜேக் சுலிவன் எப்படி அந்த மக்களை காப்பாற்றுகிறார் என்கிற அவதார் படத்தின் கதையை டிரைலரில் காட்டி உள்ளார் ஜேம்ஸ் கேமரூன்.

உடனடியாக நீக்கம்
அவதார் படத்தின் டிரைலர் லீக்கான நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் உலகம் முழுக்க அதனை ஷேர் செய்யத் தொடங்கினர். சமூக வலைதளங்கள் முழுக்க அவதார் 2 டிரைலர்கள் கசிந்து டிரெண்டாகின. ஆனால், உடனடியாக தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி தங்களது சைபர் டீமை வைத்து அத்தனை வீடியோக்களையும் அதிரடியாக நீக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











