சிகரெட்டால் சுட்டார், மார்பில் பீர் பாட்டிலை உடைத்தார்: நடிகர் இந்தர் குமார் மீது மாடல் அழகி புகார்
மும்பை: பலாத்கார வழக்கில் கைதான நடிகர் இந்தர் குமார் தனக்கு சிகரெட் நெருப்பால் சூடு வைத்ததாகவும், மார்பில் பீர் பாட்டிலை உடைத்ததாகவும் பாதிக்கப்பட்ட மாடல் அழகி தெரிவித்துள்ளார்.
சல்மான் கானின் நண்பரும், நடிகருமான இந்தர் குமார் பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி 22 வயது மாடல் அழகி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண் பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
இந்தர் குமார் சிகரெட் துண்டுகளை வைத்து என் கையில் சூடு போட்டுள்ளார். அவர் பீர் பாட்டில்களை எனது மார்பில் அடித்து உடைத்துள்ளார். என் விருப்பமின்றி உறவு வைத்துள்ளார் என்றார்.
இது குறித்து இந்தர் குமார் கூறுகையில்,
எனக்கும் அந்த மாடலுக்கும் இடையே பழக்கம் எல்லாம் இல்லை. அவருக்கும் எனது மனைவிக்கு பெரிய சண்டையே நடந்தது. என் மனைவியுடனான பிரச்சனை தீர்ந்து நாங்கள் ஒன்றாக உள்ளோம். அந்த மாடல் அழகி சொல்வது எல்லாம் பொய் என்றார்.
இந்தர் குமாரின் மனைவி பல்லவி கூறுகையில்,
என் கணவர் ஒரு அப்பாவி. அவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அந்த பெண் என் கணவரை ஜிம்மில் பார்த்து தனக்கு பயிற்சி அளிக்குமாறு கேட்டார். அவரும் எங்கள் வீட்டில் வைத்து பயிற்சி அளித்தார். ஆனால் அந்த பெண் தான் எனது கணவரை காதலிப்பதாக மெசேஜ் அனுப்பியதுடன் தன் கையை அறுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அனுப்பினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இந்தர் அந்த பெண்ணுக்கு போன் செய்து தான் திருமணமானவன் மற்றும் ஒரு குழந்தைக்கு தந்தை, வாழ்க்கை மிகவும் அரிதானது அதை இழக்க வேண்டாம் என்று புத்திமதி கூறினார் என்றார்.
முன்னதாக இந்தர் குமார் தன்னை தாக்கியதாக அவரது மாமியார் மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் இந்தர் குமார் ஒரு இரவு முழுக்க காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு பின்னர் மறுநாள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











