தீவிரமடையும் கொரோனா 2வது அலை.. நின்றுபோன முன்னனி நடிகர்களின் ஷூட்டிங்
சென்னை: கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தற்போது திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.
இருந்த போதும் படப்பிடிப்பு குறித்து தமிழக அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. சில இடங்களில் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் முன்னனி நடிகர்களான சூர்யா, விக்ரம், கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படத்தின் படப்பிடிப்பு சூழ்நிலையை கருதி நின்றுள்ளது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 40வது படத்தில் நடிக்கிறார். இன்னும் 2 வார படப்பிடிப்பு மட்டுமே மிச்சம் உள்ளதாக சொல்ல படுகிறது. இந்நிலையில் படக்குழு சண்டை காட்சி ஒன்றை படமெடுக்க இருந்தது. ஆனால் தற்போது சூழ்நிலையை கருத்திற்கொண்டு #சூர்யா40 படக்குழு படப்பிடிப்பை நிறுத்தி உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட படப்பிடிப்பு
சியான் விக்ரமின் 60வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இதில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெறாத நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பு நின்றுள்ளது. மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

டான் திரைப்படம்
அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் டான். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் நிறைவு பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருந்த இவ்வேளையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக டான் படக்குழு படப்பிடிப்பை நிறுத்தியுள்ளதாக தெரிகிறது.

சர்தார் திரைப்படம்
PS மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் சர்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடந்து வந்த நிலையில் படக்குழு சூழ்நிலையை கருத்திற்கொண்டு படப்பிடிப்பை நிறுத்தியுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கையை பொறுத்தே நின்று போன படப்பிடிப்புகள் தொடங்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











