தொடரும் கொரோனா அச்சுறுத்தல்... ரஜினிகாந்த், அஜித்குமார், சிம்பு பட படப்பிடிப்புகள் பாதிப்பு
சென்னை: கொரோனா காரணமாக, படப்பிடிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ரஜினி, அஜித், சிம்பு பட படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா, இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் காரணமாக, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு படப்பிடிப்புகள் வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன.

சினிமா பணிகள்
இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், அனைத்திந்திய தொழிலாளர் மாமன்றம் ஆகியவை, வரும் 19 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அனைத்து திரைப்படப் பணிகளையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இதையடுத்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் (பெப்சி) 19 ஆம் தேதி முதல், அடுத்த அறிவிப்பு வரும் வரை திரைப்படப் பணிகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதை பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

ரஷ்யாவில் ஷூட்டிங்
இதனால், படபிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதோடு, பல படங்களின் ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ஷூட்டிங், ரஷ்யாவில் நடந்து வந்தது. கொரோனா காரணமாக பாதியிலேயே இந்தியா திரும்புவதாக, இயக்குநர் அஜய் ஞானமுத்து, தெரிவித்திருந்தார். 'கொரோனா, தனது படத்தின் ரிலீஸ் அப்டேட்டை தாமதப்படுத்துவதாகக் கூறி ட்வீட் செய்துள்ளார், கார்த்தியின் சுல்தான் படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.

ரிலீஸ் தள்ளி வைப்பு
மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு, புனேவில் தொடங்க இருந்தது. அது கேன்சல் செய்யப்பட்டுள்ளது. மோகன்லால், சுனில் ஷெட்டி, அர்ஜூன் நடித்துள்ள 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' படம், வரும் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. அதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற மொழிகளிலும் பல படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ரஜினி, அஜித், சிம்பு
இந்நிலையில், ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் வரும் 31 ஆம் தேதி வரை, படப்பிடிப்பு ஏதும் நடக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு நடந்து வரும், சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் அஜித்தின் வலிமை, ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











