போதைப்பொருள் வழக்கு.. பற்றிக்கொண்டு எரியும் பாலிவுட்.. பிரபல நடிகையின் தம்பிக்கு சம்மன்!
மும்பை: நடிகை ஷரத்தா கபூரின் சகோதரரான சித்தான்த் கபூர், சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளார். மும்பை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (ANC), பிரபல தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடைய போதை விருந்துகள் குறித்த விசாரணையில் இவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் சித்தான்த் கபூரின் ஈடுபாடு குறித்து தகவல்கள் வெளியாகி, பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. "ஷூட்அவுட் அட் வடலா" மற்றும் "அக்லி" போன்ற படங்களில் நடித்துள்ள சித்தான்த் கபூர், நவம்பர் 25 அன்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவு முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

பிரபலங்களுக்காக ஆடம்பரமான போதை விருந்துகளை ஏற்பாடு செய்வதாக போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கூறிய தகவலின் அடிப்படையில் சித்தான்த் கபூரின் பெயர் வெளியானது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விசாரணையில், தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியான சலீம் டோலா என்பவரால் நடத்தப்படும் பெரிய போதைப்பொருள் சிண்டிகேட் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துபாயில் முகமது சலீம் மற்றும் முகமது சுஹைல் ஷேக் கைது செய்யப்பட்டதிலிருந்து இந்த விசாரணை வேகம் பெற்றது. பிப்ரவரி 2024-ல் சிறிய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதிலிருந்து நடந்த 15வது கைது இதுவாகும். ஷேக் போதைப்பொருள் விநியோக வலையமைப்பில் ஒரு முக்கிய நபராகக் கருதப்படுகிறார்.
போதை விருந்துகள்: விசாரணையாளர்கள் பெற்ற ஆவணங்களின்படி, சலீம் டோலாவின் மகன் தாஹிர், நடிகர், மாடல்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் உட்பட பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் போதைப்பொருள் விருந்துகளில் கலந்துகொண்டதாகக் கூறியுள்ளார். இந்த விருந்துகள் இந்தியாவுக்குள்ளேயும், வெளிநாடுகளிலும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணையின் கீழ் ஷரத்தா கபூர், நோரா ஃபதேஹி மற்றும் அரசியல்வாதி ஜீஷான் சித்திக் போன்றோரின் பெயர்களும் உள்ளன. மேலும், மறைந்த ஹசீனா பார்க்கரின் மகன் அலிஷா பார்க்கர், தயாரிப்பாளர் இரட்டையர்களான அப்பாஸ்-மஸ்தான் மற்றும் ராப்பர் லோகா ஆகியோரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பெரிய நெட்வொர்க்: டோங்கிரியைச் சேர்ந்த 31 வயதான ஷேக், சலீம் டோலாவின் நெருங்கிய உதவியாளராகக் கூறப்படுகிறார். விசாரணையின் போது, இந்த விருந்துகளுக்கு போதைப்பொருள் பணமே செலவு செய்யப்பட்டதாகவும், போதைப்பொருள் விநியோக வலையமைப்பை உருவாக்குவதற்கான தளங்களாகவும் அவை செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.போதைப்பொருள் விற்பனையாளர்களைச் சேர்ப்பது முதல் நேரடியாக போதைப்பொருட்களை வழங்குவது வரை ஷேக் முக்கியப் பங்காற்றியதாக நம்பப்படுகிறது. பல பிரபலங்களின் பெயர்கள் வெளிவந்துள்ள நிலையில், மும்பை குற்றப் பிரிவு, அமலாக்க இயக்குனரகத்துடன் (ED) இணைந்து, சம்பந்தப்பட்ட பிரபலங்களை அழைத்து வாக்குமூலம் பெறவுள்ளது.
பரபரப்பு: இந்த கூட்டு முயற்சி போதைப்பொருள் சிண்டிகேட்டின் முழு வீச்சையும், பாலிவுட் உடனான அதன் தொடர்புகளையும் வெளிக்கொணர நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வழக்கு பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டும் இல்லாமல், பலர் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











