பிரபாஸின் சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாபாத்திரம் என்ன தெரியுமா? பர்த்டே அதுவுமா செம ட்ரீட்!
சென்னை: கடந்த ஆண்டு பிறந்தநாளில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது புதிய காதலரான சாந்தனு ஹசாரிகாவை சமூக வலைதளம் வாயிலாக அறிமுகப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், இந்த பிறந்தநாளில் நடிகை ஸ்ருதிஹாசன் சலார் படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை இயக்குநர் பிரசாந்த் நீல் வெளியிட்டு ஸ்ருதிஹாசனுக்கு சூப்பரான பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ஹேப்பி பர்த்டே ஸ்ருதி
நடிகர் கமல்ஹாசன் மற்றும் சாரிகாவுக்கு மூத்த மகளாக 1986ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி பிறந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். தந்தையை போலவே சினிமா மீது ஆர்வம் வந்த நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் 2010ம் ஆண்டு லக் எனும் இந்தி படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் சூர்யாவின் 7ம் அறிவு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஸ்ருதிஹாசன்.

டாப் ஹீரோக்களுடன்
சூர்யா உடன் 7ம் அறிவு, சிங்கம் 3, விஜய் உடன் புலி, அஜித்துடன் வேதாளம், தனுஷ் உடன் 3, விஷாலுடன் பூஜை, விஜய்சேதுபதியுடன் லாபம் என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ள ஸ்ருதிஹாசன் டோலிவுட்டிலும் மகேஷ் பாபு, பவன் கல்யாண், ராம்சரண், அல்லு அர்ஜுன் என ஏகப்பட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது பிரபாஸ் உடன் பிரம்மாண்டமான படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

பிரபாஸ் படத்தில்
கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்டமான ஆக்ஷன் திரைப்படமான சலார் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கேஜிஎஃப் 2 படமே வெளியாகாததால் தாமதம் ஆகி வருகிறது. இந்த ஆண்டு பிரபாஸ் ரசிகர்களுக்கு ராதே ஷ்யாம் மற்றும் சலார் என டபுள் ட்ரீட் காத்திருக்கு.

என்ன கேரக்டர்
இந்நிலையில், சலார் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகை ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் அவர் ஆத்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்கிற அறிவிப்புடன் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு சூப்பரான பர்த்டே கிஃப்ட்டை நடிகை ஸ்ருதிஹாசனுக்கு வழங்கி உள்ளார்.

கலர் சேர்த்து இருக்கீங்க
பிரபாஸின் சலார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தாலே படு ராவான மண் புழுதி படர்ந்த டிசர்ட் அணிந்து நடிகர் பிரபாஸ் தோற்றமளிப்பார். படமும் அதே போலத்தான் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து ரொம்பவே ராவாக உருவாகி வருகிறது. இந்நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் மட்டும் தான் அந்த செட்டில் கலர் சேர்த்தவர் என்று குறிப்பிட்டு இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

ரிப்போர்ட்டரா
நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் சலார் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து இவ்வளவு சீக்கிரமாக எதையும் கூற முடியாது என்று கூறியிருந்தார். ஆனால், அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படத்தில் தனக்கு ஒரு சண்டைக் காட்சியும் இல்லை என்று கூறியிருந்தார். குர்த்தாவில் செம க்யூட்டாக இருக்கும் ஸ்ருதிஹாசனை பார்த்தால் ஒருவேளை ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாரா? என்கிற யூகங்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











