ஃப்ரோஸன் 2 எல்சாவுக்கு தமிழில் யார் குரல் கொடுக்கிறாங்க தெரியுமா?
சென்னை: டிஸ்னியின் ஃப்ரோஸன் 2 படம் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 22ம் தேதி வெளியாகிறது.
இந்தியாவில், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஃப்ரோஸன் 2 ரிலீஸ் செய்யப்படுகிறது.
ஃப்ரோஸன் 2 நாயகி எல்சாவின் தமிழ் வெர்ஷனுக்கு நடிகை ஷ்ருதி ஹாசனும், தெலுங்கு வெர்ஷனுக்கு நடிகை நித்யா மேனனும் குரல் கொடுத்துள்ளனர்.
என்ன கதை?
பிறவியிலேயே தொட்டதையெல்லாம் உறைய வைக்கும் சக்தி படைத்த எல்சா, தனது தங்கையின் காதலை பொறுக்க முடியாமல், தனது ராஜ்யத்தையே பனியாக உறைய வைத்து விட்டு போக, சூர்ய ஒளியை கொண்டு வர தங்கை ஆன்னா போராடுவதும் இறுதியில் அக்காவை சந்தோஷப்படுத்தி ராஜ்யத்தை காப்பாற்றுவதும் தான் 2013ம் ஆண்டு வெளியான ஃப்ரோஸன் படத்தின் கதை.

இசைக்காவியம்
அனிமேஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ஃப்ரோஸன் முதல் மற்றும் இரண்டாம் பாகம் இசைக்காவியமாக பல பாடல்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த ‘Let it Go' பாடல் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. இரண்டாம் பாகத்திலும் அது போன்று கதையை நகர்த்தி செல்லும் மைய பாடலாக 'Into the Unknown' பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ஜெனிஃபர் லீ கூறியுள்ளார்.
யார் யார்
ஃப்ரோஸன் படத்தில் முக்கிய கதாபாத்திரமான எல்சா மற்றும் ஆன்னா கதாபாத்திரத்திற்கு ஹாலிவுட்டில், கிறிஸ்டன் பெல் மற்றும் இடினா மென்சல் குரல் கொடுத்துள்ளனர்.
இந்தியாவில் வெளியாகும் ஃப்ரோஸன் படத்திற்கு பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது சகோதரியான பரிணித்தி சோப்ரா குரல் கொடுத்துள்ளனர்.
தெலுங்கு வெர்ஷனுக்கு பிரபல நடிகை நித்யா மேனன் எல்சா கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். ஆன்னாவாக தெலுங்கில் யார் குரல் கொடுத்துள்ளார் என்ற விபரம் வெளியாகவில்லை.
தமிழில்
நாம் முன்னதாக எதிர்பார்த்ததை போலவே தமிழில் நடிகை ஷ்ருதிஹாசன் நாயகி எல்சா கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். இந்த தகவலை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஷ்ருதிஹாசன் எல்சாவிற்கு குரல் கொடுப்பது தனக்கு கிடைத்த பாக்கியம் எனக்கூறியுள்ளார்.
ஆனால், தமிழிலும் தங்கை ஆன்னா கதாபாத்திரத்திற்கு யார் குரல் கொடுக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை. ஷ்ருதிஹாசனின் தங்கையும் நடிகையுமான அக்ஷரா குரல் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











