ஸ்ருதி ஹாஸனுக்கு அடித்தது ஜாக்பாட்: ஹாலிவுட் செல்கிறார்
சென்னை: அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஸ்ருதி ஹாஸன்.
ஸ்ருதி ஹாஸன் லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேலை காதலித்தபோது படங்களில் அவ்வளவாக கவனம் செலுத்தாமல் இருந்தார். காதலரை பிரிந்த பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ருதி ஹாஸன்.

அவர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து லாபம் படத்தில் நடித்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளது. இது தவிர இந்தியில் பவர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் வாய்ப்பு ஸ்ருதிக்கு கிடைத்துள்ளது. சி.ஐ.ஏ.வின் கற்பனை ஆபரேஷனான டிரெட்ஸ்டோனை அடிப்படையாக வைத்து போர்ன் சீரீஸ் படங்கள் எடுக்கப்பட்டன. ஜேசன் போர்ன் யூனிவர்ஸை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் டிரெட்ஸ்டோன் தொலைக்காட்சி தொடரில் தான் ஸ்ருதி ஹாஸன் நடிக்க உள்ளார்.
ஸ்க்ரிப்ட்படி டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் வெயிட்டராக வேலை செய்யும் ஸ்ருதி ஹாஸன் நிஜத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு அசாசின். இந்த தொடரில் ஸ்ருதியின் பெயர் நீரா பட்டேல். அசாசினாக நடிக்க பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி ஹாஸன். ஜூலை மாதம் முதல் வாரத்தில் புதபெஸ்டில் நடக்கும் ஷூட்டிங்கில் ஸ்ருதி ஹாஸன் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறியதாவது,
டிரெட்ஸ்டோன் தொடர் உலகின் பல்வேறு பகுதிகளில் ஷூட் செய்யப்பட உள்ளது. அமெரிக்காவில் சில அருமையான ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்கள் பரிந்துரை செய்து தான் நான் ஆடிஷனில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டேன்.
அந்த தொலைக்காட்சி தொடரில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறேன். நிறைய பயிற்சி எடுக்க வேண்டியுள்ளது. அந்த தொடர் முழுக்க ஆக்ஷன் காட்சிகளாகத் தான் இருக்கும். நான் எப்பொழுதுமே டூப் போடாமல் நானே ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பேன். இந்த தொடரில் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
ஸ்ருதி ஹாஸன் பழையபடி பிசியாகிக் கொண்டிருப்பது அவரின் ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சி அளித்துள்ளது. நீங்கள் காதலரை பிரிந்ததும் கூட ஒரு வகையில் நல்லது தான். அவருக்காக நீங்கள் கெரியரை விட்டுக் கொடுத்தீர்கள். ஆனால் அதனால் என்ன நடந்தது. நடந்ததை மறந்துவிட்டு தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்துங்கள் ஸ்ருதி என்று ரசிகர்கள் அக்கறையுடன் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











