மோசமா இல்லை.. விவகாரத்து எனக்கு சாதாரண பிரேக் அப் மாதிரிதான் இருந்தது.. சொல்கிறார் பிரபல நடிகை!
மும்பை: விவாகரத்து என்பது பெரிய வார்த்தையாக தோன்றலாம். ஆனால், என் விஷயத்தில் அது மோசமானதல்ல என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
தமிழில், உதயா நடித்த ரா ரா, ஒரு முத்தம் ஒரு யுத்தம், கருணாஸ் நடித்த சந்தமாமா உட்பட சில படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு பிரசாத்.
தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தேசிய விருதும் பெற்றுள்ளார்.

காதல் திருமணம்
இவரும் இவரது நீண்ட நாள் நண்பரான இந்திப் பட இயக்குனர் ரோகித் மிட்டலும் காதலித்து வந்தனர். கடந்த 2018 ஆம் வருடம் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணத்துக்கு இயக்குனர் அனுராக் காஷ்யப் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், சில மாதங்களிலேயே தனது திருமணத்தை முறித்துக் கொண்டதாக, ஸ்வேதா பாசு பிரசாத் அறிவித்தார்.

அந்த அர்த்தமல்ல
இதுபற்றி சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர், பல மாத யோசனைக்குப் பிறகு இந்த முடிவுக்கு வந்துள்ளோம். இந்த முடிவை இருவரும் சேர்ந்தே எடுத்தோம். எல்லா புத்தகங்களையும் அட்டை டூ அட்டை படித்துவிட முடியாது. அதற்கு புத்தகம் மோசமாக இருக்கிறது என்று அர்த்தமல்ல.

இனிமையான வாழ்க்கை
ஈடுசெய்ய முடியாத சில நினைவுகளுக்கும் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி ரோகித். இனிமையான வாழ்க்கை உன் முன் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார் ஸ்வேதா. இதுவும் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், கொரோனா காரணமாகத் தனிமையில் வசித்த ஸ்வேதா பாசு, மனநல சிகிச்சைப் பெற்றார்.

மன நலப்பிரச்னை
'என் வாழ்க்கையில் எப்போதும் தனியாக வசித்ததில்லை. முதலில் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வசித்தேன். பிறகு கணவருடன் (விவாகரத்துக்கு முன்) வசித்தேன். விவாகரத்துக்குப் பிறகு, தனியாக வசித்து வருகிறேன். இதனால் மனப்பிரச்னை ஏற்பட்டது என்று கூறியிருந்தார்.

சாதாரண பிரிவு
இந்நிலையில் இப்போது அளித்துள்ள பேட்டியில், ரோகித்தை விவகாரத்து செய்ததை சாதாரண பிரிவு போலவே உணர்ந்தேன் என்று கூறியுள்ளார். 'பத்து வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த சிலர் பிரிந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். நாங்கள் ஏழு எட்டு மாதங்களிலேயே பிரிந்தது, சாதாரண பிரேக் அப் மாதிரிதான் இருந்தது.

பெரிய வார்த்தை
விவாகரத்து என்பது பெரிய வார்த்தையாக தோன்றலாம். ஆனால், என் விஷயத்தில் அது மோசமானதல்ல என்று உறுதியாகச் சொல்ல முடியும். இந்த பிரிவு காரணமாக, நான் சோகத்தில் இருந்தேன் என்பது உண்மைதான். பிறகு எனக்கு நானே தோழனாக மாறிய பிறகு நன்றாக இருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











