அதிரடி சரவெடி...'ஷியாம் சிங்கா ராய்' மூவி நெட்ஃபிளிக்ஸில் உலகில் 3 ஆம் இடம், இந்தியாவில் முதல் இடம்
நடிகர் நானி நடிப்பில் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்டு ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் 'ஷியாம் சிங்கா ராய்' . தற்போது அது நெட்ஃபிளிக்சில் உலக அளவில் 3 ஆம் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் முதலிடத்திலும் உள்ளது.
அதிக பார்வையாளர்கள், அதிகம் பேசப்பட்ட படம்
நெட்ஃபிளிக்சில் வெளியானதிலிருந்து, இந்த திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் இந்தியா ட்ரெண்ட்ஸ் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதுதவிர 'ஷியாம் சிங்கா ராய்' இது உலக சாதனையையும் படைத்துள்ளது. ஜனவரி 17 மற்றும் 23 க்கு இடையில், ஷ்யாம் சிங்க ராய் 35,90,000 பார்வை நேரத்தைக் குவித்துள்ளது. இது நெட்ஃபிளிக்சில் மூன்றாவது இடத்தில் உள்ளது, இதுதவிர உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட மூன்றாவது திரைப்படமாகும்.

சமூக ஊடகங்களில் விவாதப்பொருளான ‘ஷியாம் சிங்கா ராய்'
அந்த வாரத்தில் வேறு எந்த இந்தியப் படமும் டாப்-10 இல் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்ல சமூக ஊடக விவாதங்களில் நானி, சாய் பல்லவி மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள், ரோசி பாத்திரம், அண்ணாத்த படத்துக்காக சாய் பல்லவி நடித்த பாத்திரத்தை துறந்த கீர்த்தி சுரேஷ், 'ஷியாம் சிங்கா ராய்' படத்தின் வசனங்கள் என படம், கதாபாத்திரங்கள் குறித்து பாராட்டுகளால் நிரப்பப்பட்டுள்ளன.

'ஷியாம் சிங்கா ராய்' உலக அளவில் 3 ஆம் இடம்
நல்ல கதையம்சமுள்ள படங்களுக்கு ரசிகர்கள் எப்போதும் ஆதரவளிப்பார்கள் என்பதற்கு நானி நடித்த 'ஷியாம் சிங்கா ராய்' படம் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. ராகுல சங்கிருதியாயன் இயக்கத்தில் நடிகர் நானி நடித்து வெளியான 'ஷியாம் சிங்கா ராய்' படம் தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழிலும் டப் செய்யப்பட்டு ஓடிடி தளத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி சக்கை போடு போடுகிறது.

நானி எனும் நாயகன்
நடிகர் நானி தனது வித்தியாசமான நடிப்பால் தெலுங்கு ரசிகர்களைத்தாண்டி தமிழ் பட ரசிகர்களையும் கவர்ந்துள்ள நடிகர். நான் ஈ உள்ளிட்ட அவரது படங்கள் தெலுங்கு ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த படம். தற்போது அவரது நடிப்பில் வெளிவந்துள்ள படம் 'ஷியாம் சிங்கா ராய்' . டிசம்பர் மாதம் திரையரங்கில் வெளியான படம் தற்போது ஓடிடி தளத்தில் நெட் ஃபிளிக்ஸில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தின் கதை இதுதான்
படத்தின் கதை பெரிதாக ஒன்றுமில்லை. 1980 களில் கமல்ஹாசன், ஷோபனா, ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் போன்ற கதை அமைப்புத்தான். அதில் முற்பகுதியில் கமல் பாடகராகவும், பிற்பாதியில் மார்ஷியல் ஆர்டிஸ்டாகவும் வருவார். இந்தப்படத்தில் நானி சினிமா இயக்குநராகவும், பிற்பாதியில் புரட்சிகர எழுத்தாளராகவும் வருகிறார். ஆனால் படம் எடுக்கப்பட்ட விதம் வசனங்கள், கேமரா, காட்சிப்படுத்திய விதம் ஷியாம் சிங்கா ராய் ரசிகர்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

நகைச்சுவையான முற்பகுதி
முற்பகுதியில் சினிமா இயக்குநராக வரும் நானி தான் எடுக்கப்போகும் குறும்படத்திற்கு கதாநாயகியை தேடுவதும், அதற்கான ஆடிஷன் காட்சிகளும் நகைச்சுவையாக உள்ளது. கதாநாயகியை கண்டுபிடித்தவுடன் அவரிடம் சம்மதம் கேட்டு கெஞ்சுவதும், எதற்கும் ஒப்புக்கொள்ளாத கதாநாயகியை கடைசியில் சிகரெட் பிடிப்பதை உங்க அப்பாகிட்ட சொல்லிடுவேன் என மிரட்டி நடிக்க வைப்பதும் சுவாரஸ்யமான காட்சி.

பிற்பகுதியில் அதிரடி சரவெடி
முற்பகுதி அப்படி என்றால் பிற்பகுதி முழுவதும் சாய் பல்லவி- நானி காதல், நானியின் புரட்சிகர எழுத்தாளர் பாத்திரம், புரட்சிகர வசனங்கள், கலை, கேமரா, இசை என படம் முழுவதும் அதிரடி சரவெடி காட்டியிருப்பார்கள். படத்தில் சாய்பல்லவி அழகாக பயன்படுத்தப்பட்டுள்ளார். தேவதாசி ஒழிப்பு முறையை பிரதானமாக சொல்லி எடுக்கப்பட்டாலும், பல இடங்களில் யதார்த்தம் உதைத்தாலும் சாய்பல்லவி- நானி காதல் காட்சிகள் அதில் இழையோடும் சோகம் அழகாக சொல்லப்பட்டுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த காட்சிகள்
படத்தில் முற்போக்கு சிந்தனைக் கொண்ட எழுத்தாளராக முறுக்கிய மீசையுடன் வரும் நானி பேசும் வசனங்கள் கூர்மை என்றால் சாய் பல்லவியுடன் நடத்தும் காதல் இனிமை. 1970 ஆம் ஆண்டுக்கே நம்மை அழைத்துச் செல்லும் கலை இயக்குனர், ஒளிப்பதிவு, இயக்கம் அருமை. திரைக்கதை அமைக்கப்பட்ட விதம் ரோசி கதாபாத்திரம் குறித்த சஸ்பென்ஸ் சிறப்பு

ஓடிடி தளத்தில் உலக அளவில் 3 ஆம் இடம், இந்தியாவில் முதல் இடம்
ஓடிடி தளத்தில் நெட்ஃபிளிக்சில் உலக அளவில் 3 ஆம் இடத்தை 'ஷியாம் சிங்கா ராய்' பிடித்துள்ளது அந்தப்படத்திற்கு கிடைத்த வெற்றி. இந்திய அளவில் முதலிடத்தையும் இப்படம் பெற்றுள்ளது. இதை நானி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். நானியும் மனம் நெகிழ்ந்து நன்றி சொல்லியுள்ளார்.
Recommended Video

இயக்குநர் ராகுல சங்கிருதியாயன் பேட்டி
ஷியாம் சிங்கா ராய் படத்தை தொடர்ந்து வருங்காலத்தில் டைம் ட்ராவலை மையப்படுத்தி உருவாக்க உள்ளதாகவும், தனது படங்களில் அதிகமாக மனித மனங்களும் உணர்வுகள் குறித்தும்தான் பேசியிருப்பதாகவும், அதேபோல, 'ஷ்யாம் சிங்கா ராய்' மாதிரி சமூகத்தில் அதிக விழிப்புணர்வு கொண்டப் படங்களும் இனி இயக்க உள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











