ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருக்கோம்.. உதவி கமிஷனர் பெயரைச் சொல்லி.. சினிமா இயக்குனரிடம் மோசடி!
சென்னை: சினிமா இயக்குனரிடம் உதவி கமிஷனர் பெயரில் மோசடி நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒய்.ஜி.மகேந்திரன், சாந்தி கிருஷ்ணா, சுதா மகேந்திரன், மதுவந்தி. புதுமுகங்கள் ப்ரணவ் சுரேஷ், பிரிசிதா உதய் நடித்த மலையாள படம், ஷியாமா ராகம்.
இந்தப் படம் தமிழிலும் வெளியானது. இதை சேது இயாள் என்ற மலையாள இயக்குனர் இயக்கி இருந்தார்.

இயக்குநர் லோகிததாஸ்
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சேது. மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் லோகிததாஸிடம் உதவி இயக்குநராக இருந்தவர். இவருடைய நெருங்கிய நண்பர் ஜூலியஸ் சீசர். சென்னையில் உதவி போலீஸ் கமிஷனராக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, நள்ளிரவு சேதுவின் செல்போன் மெசெஞ்சரில் ஒரு செய்தி வந்துள்ளது.

மருத்துவமனையில்
அதை சென்னையில் உள்ள ஜூலியஸ் சீசர் அனுப்பி இருந்தார். அந்த தகவலில், மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடனே 10 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கவும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. கூடவே, போன்-பே கணக்கு விவரமும் கொடுக்கப் பட்டிருந்தது.

பணத்தை அனுப்பினார்
உடனே சேது, போன்-பே கணக்கில் பணத்தை அனுப்பினார். பிறகு பணம் கிடைத்து விட்டதாக செய்தி வந்தது. இதையடுத்து சேது, மெசெஞ்சர் கால் மூலம் ஜூலியஸ் சீசரை தொடர்பு கொள்ள முயன்றார். அவர் போனை எடுக்கவில்லை. விரைவில் அழைக்கிறேன் என்ற செய்தி மட்டும் வந்தது.

சந்தேகம் அடைந்தார்
இந்நிலையில் மீண்டும் 15 ஆயிரம் ரூபாய் கேட்டு தகவல் வந்தது. திருப்பி அழைத்தபோது போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சேது, ஜூலியஸ் சீசரின் செல்போன் எண்ணில் அழைத்தார். போனை எடுத்தவர், தான் பணம் கேட்டு எந்த தகவலும் அனுப்ப வில்லையே என்றார்.

ஆன்-லைன் மோசடி
இதனால் சேது அதிர்ச்சி அடைந்தார். பிறகுதான் அவர் பெயரில் மோசடி நடந்திருப்பது சேதுவுக்கு தெரிய வந்தது. ஒடிசா மாநிலத்தில் இருந்து இந்த மோசடி நடந்துள்ளது. இதுபோன்ற ஆன்-லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். இந்த மோசடி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











