Rajini X Vishal : தலைவருக்கு பாராட்டு விழா உறுதி.. ஃபுல் பார்மில் புதுமாப்பிள்ளை விஷால்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் பெருமை மிகு அடையாளங்களில் ஒருவர். 50 ஆண்டுகளை தமிழ் சினிமாவில் நிறைவு செய்த அவருக்கு, அவரது கூலி படத்தின் ரிலீஸின் போது பிரபலங்கள் தொடங்கி, அரசியல் தலைவர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இப்படி இருக்கும்போது, இன்று தனது 48வது பிறந்த நாளையும் திருமண நிச்சயதார்த்தத்தையும் கொண்டாடும் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் சூப்பர் ஸ்டாருக்கு விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1975 ஆம் ஆண்டு மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பு முற்றிலும் ஸ்டைலாகவும் தமிழில் அப்போது இருந்த நடிகர்களை விட வித்தியாசமாகவும் இருந்ததால் ரசிகர்கள் ரஜினியை கொண்டாடினர். இன்னும் குறிப்பாக தமிழில் கருப்பு நிறத்தில் அறிமுகமான நடிகர் ரஜினி என்பதால், அவரை தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நம்மைப் போல ஒருவர் கருப்பாக கதாநாயகன் இருக்கிறார் என உரிமை கொண்டாடினர். கலைப்புலி எஸ். தாணு ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற படத்தைக் கொடுத்தார். அன்று முதல் இன்றும் நாளையும் எப்போதும் ரஜினிதான் சூப்பர் ஸ்டாராக உள்ளார்.

சூப்பர் ஸ்டார்: நடிகராக மட்டும் இல்லாமல், தயாரிப்பாளராக, கதை ஆசிரியராக, விநியோகஸ்தராக இருந்துள்ளார். இப்படி இருக்கும்போது தனது 50 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் ரஜினிகாந்த் இதுவரை 171 படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜெயிலர் 2வில் அதாவது அவரது 172வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நெல்சன் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு முதற்பாதியில் ரிலீஸ் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.
50 ஆண்டுகள்: திரைவாழ்க்கையில் 50 ஆண்டுகளைக் கடந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு திரைத்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுமா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கிய, தயாரித்த ஜாம்பவான்கள் மற்றும் அவர்களது வாரிசுகளை அழைத்து பாராட்டு விழா நடத்தப்படுமா என்ற ஏக்கம் ரஜினி ரசிகர்களுக்கு இருக்கிறது. 50 ஆண்டு கால திரைப்பயணம் என்பது ஏதோ சாதாரண விஷயம் அல்ல. சினிமாவே வேண்டாம் ஆன்மீகத்தில் கவனம் செலுத்துகிறேன் என்று எடுத்த இடைவெளி, உடல்நலக் குறைவால் சிகிச்சைக்கு எடுத்த பெரிய இடைவெளி என ரஜினி எனும் அனுபவக் குதிரை எதிர்கொண்ட சவால்கள் அதிகம். அதனால்தான் அவரது ஒரு சொட்டு வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு தமிழ்நாடு கொடுத்தது.

விஷால் உறுதி: இந்நிலையில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், சினிமா உலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. தலைவருக்கு விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும், தற்போது நடிகர் சங்க கட்டிட வேலைகள் தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு இருப்பதால், கவனம் முழுவதும் இதில் உள்ளது. விரைவில் சூப்பர் ஸ்டாருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று உறுதியாக கூறினார். விஷால் இவ்வாறு சொன்னதும் ரசிகர்கள் குஷி ஆகிவிட்டார்கள். மேலும் இன்று தனது 48வது பிறந்த நாளையும் நிச்சயதார்த்தத்தையும் முடித்துள்ள புதுமாப்பிள்ளை விஷால் ஃபுல் பார்மில் இருக்கிறாரே என்று பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











