Ten Hours Blue Sattai Maran Review: டென் ஹவர்ஸ் படம் தேறுமா தேறாதா? ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
சென்னை: சிபிராஜ் கதாநாயகனாக நடித்து நேற்று அதாவது ஏப்ரல் 18ஆம் தேதி வெளியான படம் டென் ஹவர்ஸ். அறிமுக இயக்குநர் கலியபெருமாள் இளையராஜா இயக்கத்தில் உருவான இந்த படம், இன்வெஸ்டிகேஷன் திரில்லர் வகையைச் சார்ந்த படம். மேலும் படம் ஒரு நாள் இரவில் நடப்பதைப் போல எடுத்துள்ளதால், படம் எப்படி உள்ளது என்பது குறித்து விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள வீடியோவில், " படத்தின் கதையைப் பொறுத்தவரையில், படத்தின் தொடக்கத்தில் பொழுது விடிந்தால் எலக்ஷன் ரிசல்ட் வரப்போகிற நாள். இப்படியான சூழலில் சேலம் ஆத்தூரில், போலீஸ் ஸ்டேஷன் மிகவும் பரபரப்பாக உள்ளது. இந்த நேரத்தில் ஒரு பெண்ணைக் காணவில்லை என்ற புகார் வருகிறது. உடனே ஆத்தூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக உள்ள கதாநாயகன் காணாமல் போன பெண்ணை தேடி கண்டுபிடிக்க போகிறார். அங்கு சென்றால் சில மர்மமான விஷயங்கள் நடைபெறுகிறது.
இந்த நேரத்தில் ஒரு போன் கால் வருகிறது. அதில், ஒரு ஆம்னி பேருந்தில் ஒரு பெண்ணை யாரோ தொந்தரவு செய்கிறார்கள் என்கிற போன் கால் வருகிறது. உடனே அந்த ஆம்னி பேருந்தை மடக்கிப் பிடித்தால், அதற்குள் ஒரு இளைஞரை கொலை செய்துள்ளார்கள். இதனைப் பார்த்தவர்கள், கொலை குறித்த விசாரணையில் இறங்குகிறார்கள். விசாரணையில் இந்த கொலைக்கும், காணாமல் போன பெண்ணுக்கும் என்ன தொடர்பு, இதில் யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை.

10 ஹவர்ஸ்: இந்த படத்தை ஒரே இரவில், 10 மணி நேரத்திற்குள் நடக்கும் கதையாகத்தான் இந்த கதையை செய்துள்ளார்கள். கதையாக இன்வெஸ்டிகேஷன் திரில்லருக்கு நல்ல கதைதான். ஆனால், அதற்கான திரைக்கதையோ, அதை படமாக்கிய விதம் என படத்தில் நிறைய கோட்டை விட்டு விட்டார்கள். மேலும் கதையை தங்களது வசதிக்கு ஏற்றதைப் போல் படத்தை எடுத்துள்ளார்கள். குறிப்பாக, நாளைக்கு தேர்தல் ரிசல்ட், அப்படி இருக்கும் போது மூன்று காவலர்களை கொலை செய்து விடுகிறார்கள் எனும்போது, அந்த இடம் எவ்வளவு பரபரப்பாக இருக்கும். எவ்வளவு உயர் அதிகாரிகள் வருவார்கள். ஆனால் கதாநாயகன் தான் மொத்த விசாரணையையும் நடத்துகிறார்.
இயல்புத் தன்மை: தமிழ் சினிமாவில் ஒரு வழக்கம் உள்ளது, அது கல்யாண வீடாக இருந்தாலும் கதாநாயகன் தான் மாப்பிள்ளையாக இருப்பார், எழவு வீடாக இருந்தாலும் கதாநாயகன் தான் பிணமாக இருப்பார். அது போல தான் இந்த படத்தில் செய்து வைத்துள்ளார்கள். இவர்களுக்கு ஏற்றது போல கதையை வளைத்து வளைத்து செய்ததால், கதையில் ஒரு இயல்புத் தன்மை இல்லாமல் போய்விட்டது.

கோட்டை விட்டுட்டாங்க: இது மட்டும் இல்லாமல், ஓடும் பேருந்தில் ஒரு கொலை நடந்துள்ளது என்றால், பஸ்ஸுக்குள் இருக்கும் யாரோ ஒருவர்தான் கொலையைச் செய்திருக்க வேண்டும். அந்த கொலையை யார் செய்தது என்பதை கண்டுபிடிக்க, பஸ்ஸில் இருந்த மொத்த பேரையும் அழைத்து வந்து விசாரிக்கிறார்கள். இந்த இடமெல்லாம் நன்றாக ஸ்கோர் செய்ய வேண்டிய இடம். ஆனால் அது எல்லாம் விசாரணை போலவே இல்லை. அந்த இடத்தில் எல்லாம் கோட்டை விட்டு விட்டார்கள்.
ஒர்க்-அவுர்ட்: இது போன்ற இன்வெஸ்டிகேஷன் திரில்லரில் எல்லாம் பார்க்கின்ற அனைவர் மீதும் சந்தேகம் வருவதைப் போன்று படம் செய்வார்கள். பஸ்ஸில் இருக்கும் அனைவர் மீதும் கொலையை யார் செய்திருப்பார் என்ற சந்தேகம் நமக்கு வரும். அதன் பின்னர் கொலையை அவர்கள் செய்யவில்லை, வேறு ஒருவர் செய்தார் எனக் கூறுவார்கள். அப்படி எல்லாம் நமக்கு இந்த படத்தில் தோணவே இல்லை. கொலையை எவன் செய்தால் என்ன என்ற மனநிலையில்தான் அமர்ந்திருந்தோம். அப்படி அவர்கள் நினைத்து உருவாக்கிய காட்சிகள் படத்தில் ஒர்க்-அவுட் ஆகவில்லை. ரொம்ப ரொம்ப சுமாராக போய்விட்டது.

எப்படி இருக்கு: இன்வெஸ்டிகேஷன் திரில்லருக்கான கதையை சரியாக தேர்வு செய்துள்ளார்கள். ஆனால் அதன் திரைக்கதையோ படமாக்கிய விதத்திலும் ஓரளவுக்கு கவனம் செலுத்தியிருந்தால், இந்த படத்தை நல்ல படம் என்றே கூறியிருக்கலாம். அவர்கள் பரபரப்பு என நினைத்து எடுத்த காட்சிகள் எல்லாம் நமக்குள் கடத்தாததால் இந்த படம் மிகவும் சுமாரான படமாக போய்விட்டது" என அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். இவரது விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











