Siddharth: பார்த்த அடுத்த நொடியே காலில் விழுந்து கண்ணீர் விட்ட சித்தார்த்... யார் இந்த சுஜாதா..?
சென்னை: பாய்ஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமான சித்தார்த் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நடித்து வருகிறார்.
அவர் நடித்துள்ள டக்கர் என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சித்தார்த், ஒரு பெண்மணியை பார்த்ததும் காலில் விழுந்து கண் கலங்கினார்.
சித்தார்த் அப்படி காலில் விழ என்ன காரணம் என தற்போது தெரியவந்துள்ளது.

காலில் விழுந்து கண்ணீர்விட்ட சித்தார்த்:இயக்குநர் கனவோடு மணிரத்னத்திடம் அசிஸ்டெண்ட்டாக வேலை பார்த்தவர் சித்தார்த். கன்னத்தில் முத்தமிட்டால் உட்பட சில படங்களில் மணிரத்னத்திடம் உதவியாளராக வேலை பார்த்த சித்தார்த், பாய்ஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். ஷங்கர் இயக்கம் ஏஆர் ரஹ்மான் இசை என பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது.
பாய்ஸ் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து பான் இந்தியா ஸ்டாராகவும் வலம் வந்தார் சித்தார்த். ஹீரோவாக மட்டும் இல்லாமல் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் காணப்படுகிறார். தற்போது அவர் டக்கர், இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் டக்கர் திரைப்படம் நாளை (ஜூன் 9) திரையரங்குகளில் வெளியாகிறது. கார்த்திக் ஜி கிரிஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், டக்கர் படத்தின் ப்ரோமோஷனுக்காக பல யூடியூப் சேனல்களில் பேட்டிக் கொடுத்துள்ளார் சித்தார்த். அதில் விஜய்க்கும் அவருக்கும் இடையேயான நட்பு குறித்து பேசினார். தான் நடித்த தெலுங்கு படங்களை பார்த்து விஜய் மனம் விட்டு பாராட்டியுள்ளார், சில காட்சிகளை எப்படி நடித்தேன் எனக் கேட்டுள்ளார். சிம்பிளாக சொல்ல வேண்டுமானால் விஜய் ரொம்பவே க்யூட்டான ஆள். அவரிடம் எந்த ஈகோவும் கிடையாது என தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் இயக்குநராக வேண்டும் என்ற கனவில் இருந்த தான் நடிகனானது குறித்தும் பேசியுள்ளார். மேலும், ஹீரோவாக அறிமுகமான பாய்ஸ் படம் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். அப்போது அந்த அரங்கம் உள்ளே ஒரு வயதான பெண்மணி வருவதைப் பார்த்த சித்தார்த், உடனே எழுந்து நின்று கண்கலங்கினார். அங்கிருந்த மேடையில் ஏறியதும் அந்த பெண்மணியின் காலில் விழுந்து வணங்கி ஆனந்த கண்ணீர் வடித்தார்.

சித்தார்த் இந்தளவுக்கு மரியாதை வைத்த அந்தப் பெண்மணியின் பெயர் சுஜாதா என்றும், அவர்தான் எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி எனவும் சொல்லப்படுகிறது. அவர்தான் பாய்ஸ் படத்திற்காக இயக்குநர் ஷங்கரிடம் சித்தார்த்தை சிபாரிசு செய்தாராம். முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவான பாய்ஸ் படத்தில் சித்தார்த் மட்டும் தான் ஓப்பன் ஆடிஷனில் கலந்துகொள்ளாமல் செலக்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே சுஜாதாவை பார்த்ததும் அவரைப் பார்த்து ஆனந்த கண்ணீர் சிந்திய சித்தார்த் காலிலும் விழுந்து வணங்கினார்.
பாய்ஸ் படத்திற்கு சுஜாதா தான் வசனம் எழுதியிருந்தார். ஷங்கரின் அனைத்துப் படங்களிலும் சுஜாதா பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் தான் ஷங்கரிடம் சித்தார்த்தை அறிமுகம் செய்துவைத்தாராம் சுஜாதா. எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயர் எஸ் ரங்கராஜன், ஆனால் அவர் தனது மனைவி சுஜாதா பெயரில் தான் சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











