Siddharth - இந்தியாவா பாரத்தா?.. இதெல்லாம் தேவையில்லாத ஆணிங்க.. சித்தார்த் பளீச் பதில்
சென்னை: Siddharth (சித்தார்த்) இந்தியாவுக்கு பாரத் என்று பெயர் மாற்றப்படலாம் என தகவல் வெளியான சூழலில் அதுகுறித்து சித்தார்த் பதிலளித்திருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவர் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ஆனால் படம் எதுவும் இதுவரை இயக்கவில்லை. தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தியிலும் நடித்திருக்கிறார் அவர்.

ஆக்டிவ் சித்தார்த்: சித்தார்த்தை பொறுத்தவரை தனது மனதில் இருப்பதை அப்படியே பேசக்கூடியவர். குறிப்பாக அரசாங்கம் ஏதேனும் தவறு செய்தால் யாருக்கும் அஞ்சாமல் ட்வீட்டும் போடுவார்.அப்படி அவர் பதிவு செய்திருந்த பல ட்வீட்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன. ஆனால் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அமைதியாக இருந்துவருகிறார் சித்தார்த்.
டக்கரும் கவிழ்ந்தது: திறமையான நடிகர் என்று பெயர் எடுத்தாலும் இதுவரை பெரிய ஹிட் எதுவும் கொடுக்காமல் இருக்கிறார் சித்தார்த். அவரது நடிப்பில் கடைசியாக டக்கர் என்ற படம் வெளியானது. கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை சித்தார்த் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் இந்தப் படமும் அவர் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை. இதனையடுத்து இந்தியன் 2 படமானவது தனக்கு தேவையான வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
இந்தியாவா பாரத்தா?: இந்நிலையில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி சென்னையில் இன்று வாக்கத்தான் ஓட்டம் நடந்தது. இதில் சித்தார்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாக்கத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த்திடம் இந்தியாவின் பெயர் பார்த் என்று மாற்றப்படலாம் என வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
தேவையில்லாத ஆணி: அதற்கு பதிலளித்த சித்தார்த், " நாம் எல்லோருமே இந்தியாவில் சென்னையில்தான் கூடியிருக்கிறோம். இப்போது இங்கு நடந்துகொண்டிருக்கும் வாக்கத்தான் பற்றி மட்டும் பேசுவோம். இங்கே வந்துகொண்டு எந்த பெயர் யார் வைத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தேவையில்லாத ஆணி. அதனால் எதற்காக வந்திருக்கிறோமோ அதைப் பற்றி மட்டும் பேசுவோம்" என்றார்.
இந்தியா டூ பாரத்?: முன்னதாக மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு INDIA என்று பெயர் வைத்திருக்கிறது. ஒரு நாட்டின் பெயரை எப்படி தேர்தல் கூட்டணிக்கு வைக்கலாம் என பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதுமட்டுமின்றி எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதால் அதனை மத்தியில் இருக்கும் பாஜக அரசு பயன்படுத்தாமல் தவிர்த்து வருகிறது.
மேலும் ஜி 20 உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக குடியரசுத் தலைவர் பாரத் என்று அச்சிடப்பட்டிருக்கிறது. மேலும் நடைபெறவிருக்கும் மக்களவை கூட்டத்தொடரில் இதுதொடர்பான மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











