Siddharth - பொன்னியின் செல்வன் டிஸ்கஷனில் இருந்தேன்.. ஆனால் அந்த தைரியம் இல்லை - சித்தார்த்
சென்னை: Siddharth (சித்தார்த்) பொன்னியின் செல்வன் படத்தின் டிஸ்கஷனில் தானும் கலந்துகொண்டதாக நடிகர் சித்தார்த் தெரிவித்திருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவர் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ஆனால் படம் எதுவும் இயக்கவில்லை. நடிகராக இருந்தாலும் அவரால் ஒரு மெகா ஹிட்டை இத்தனை வருடங்களாக கொடுக்க முடியவில்லை

ஓபன் டாக்: சித்தார்த்தை பொறுத்தவரை தனக்கு மனதில் இருப்பதை அப்படியே பேசக்கூடியவர். குறிப்பாக அரசாங்கம் ஏதேனும் தவறு செய்தால் யாருக்கும் அஞ்சாமல் ட்வீட்டும் போடுவார்.அப்படி அவர் பதிவு செய்திருந்த பல ட்வீட்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன. ஆனால் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அமைதியாக இருந்துவருகிறார் சித்தார்த். இந்தச் சூழலில் டக்கர் படத்தை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அமைதி ஏன்?: முன்பெல்லாம் சமூக வலைதளங்களில் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்தேன். இப்போது என்னை நம்பி இவ்வளவு படங்கள், தயாரிப்பாளர்கள் இருப்பதால் அமைதியாகி விட்டேன். சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்து உழைக்கிறேன். 'பொன்னியின் செல்வன்' படத்தின் டிஸ்கஷனில் கலந்து கொண்டேன். ஆனால் அதில் நடிக்கவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மணிரத்னத்திடம் கேட்கும் தைரியம் எனக்கு இல்லை.
ஸ்பீடான் படம்: "எந்த இடத்திலும் நிற்காத ஸ்பீடான ஒரு படம் இது. 'டக்கர்' என இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் பார்டர் தாண்ட தாண்ட மாறிக் கொண்டே இருக்கும். வட இந்தியாவில் 'டக்கர்' என்றால் போட்டி, சில ஊர்களில் ஸ்மார்ட்டாக இருப்பதை 'டக்கர்' என சொல்வார்கள். மோதல், சூப்பர் என பல அர்த்தங்கள் உண்டு. இந்தப் படத்தில் 'டக்கர்' என்ற தலைப்பை பயன்படுத்தியதன் காரணம், மோதல். ஒரு பொண்ணுக்கும் ஹீரோவுக்குமான க்ளாஷ்தான் அது. சமீபகாலத்தில், சினிமாவில் வந்த கதாநாயகிகள் கதாபாத்திர வடிவமைப்பில் இது வித்தியாசமாக எனக்குப் பட்டது.

நிறைய கற்றிருக்கிறேன் 'குஷி' படம் போல காதலர்களுக்குள் வரும் பிரச்சினையா என்று கேட்டால் இல்லை. பணக்காரன் ஆக வேண்டும். ஆனால், அது முடியவில்லை எனும்போது இளைஞர்களுக்கு வரும் கோவம்தான் கதாநாயகனுக்கும் வருகிறது. ஆகஸ்ட் மாதம் வந்தால் 'பாய்ஸ்' படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிறது. இந்த 20 வருடத்தில் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்த இரண்டு வருடங்களில் நல்ல படங்களில் கமிட் ஆகியுள்ளேன். உங்கள் அனைவரது ஆதரவுடனும் 'டக்கர்' நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்" என்றார்.
முன்னதாக,கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகி பாபு நடித்துள்ள படம் 'டக்கர்'. இப்படத்தில் திவ்யான்ஷா கதாநாயகியாக நடித்துள்ளார். நிவாஸ் பிரசன்னா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











