'என் பிறந்த நாளுக்கு வீட்டிற்கு வரவேண்டாம்..' ரசிகர்களுக்கு நடிகர் சிலம்பரசன் வேண்டுகோள்!
சென்னை: எனது பிறந்த நாளன்று ரசிகர்கள் என் வீட்டிற்கு வரவேண்டாம் என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.
நடிகர் சிலம்பரசன் இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இதையடுத்து மேலும் மூன்று படங்களில் அவர் நடிக்க இருக்கிறார்.

வீட்டுக்கு வருவது
இந்நிலையில், நடிகர் சிலம்பரசனின் பிறந்த நாள் பிப்ரவரி 3 ஆம் தேதி வருகிறது. வழக்கமாக அன்று ரசிகர்கள் அவர் வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில், தனது பிறந்த நாளன்று தான் ஊரில் இல்லை என்றும் ரசிகர்கள் வீட்டுக்கு வரவேண்டாம் என்றும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

உங்கள் பேரன்பு
அதில் நடிகர் சிம்பு மேலும் கூறியிருப்பதாவது: என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கு வணக்கங்கள். எத்தனை தடைகளை கடந்து வந்தாலும், என்னுடன் என்றுமே நின்றிருக்கிறது உங்கள் பேரன்பு. அதுதான் நான் அடுத்தடுத்த படங்களை தருவதற்கும், உடல் எடையைக் குறைத்து உத்வேகமானதற்கும் முக்கியமான காரணம்.

எனது குடும்பம்
கொரோனா காலகட்டத்திற்காக, வெகுவேகமாக முடிக்கப்பட்ட ஈஸ்வரன் படத்திற்கு பெரிய வரவேற்பை கொடுத்தீர்கள், வெற்றிபெற செய்தீர்கள். உங்களை நான் ரசிகர்கள் என்று சொல்வதைவிட எனது குடும்பம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். உங்கள் அன்பிற்கு நிறைய நன்றிக் கடன்பட்டுள்ளேன்.

வெளியூர் செல்கிறேன்
எனது பிறந்த நாளன்று நான் உங்களோடுதான் இருக்க வேண்டும், ஆனால் சில முன் தீர்மானங்களால் ஊரில் இல்லை, வெளியூர் செல்கிறேன். என் குடும்பத்தினர் வீட்டுமுன் காத்திருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் நண்பர்கள் யாரும் என் பிறந்தநாளன்று சந்திக்க வந்து ஏமாற்றமடைய வேண்டாம்.

ஒருங்கிணைப்பேன்
உங்களை நேரடியாகச் சந்திக்கும் நிகழ்வை விரைவில் ஒருங்கிணைப்பேன். நாம் சந்திப்போம். ஒரு சிறு மகிழ்ச்சிக்காக, என் பிறந்த நாளன்று மாநாடு படத்தின் டீசர் வெளியாகும், மகிழுங்கள். நிச்சயம் இனி நமது ஆண்டாக, வெற்றிகரமான ஆண்டாக இருக்கும். இவ்வாறு நடிகர் சிலம்பரசன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











