பொல்லாதவன் படத்துக்கு முன்னாடியே.. சிம்புவின் அரசன் பட சீக்ரெட் சொன்ன வெற்றிமாறன்
சென்னை: வெற்றிமாறன் இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். அவர் இதுவரை இயக்கியிருக்கும் அனைத்து படங்களுமே ஹிட்டாகியிருக்கின்றன. வணிக ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாக படங்கள் கொண்டாடப்படும். இப்போது அவர் சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்கியிருக்கிறார். விரைவில் படத்திலிருந்து அப்டேட்டுகள் வரவிருக்கின்றன. இந்நிலையில் அரசன் படத்தின் கதை குறித்து அவர் பேசியிருக்கும் விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலுமகேந்திரா, கதிர் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த வெற்றிமாறன்; தனுஷை வைத்து பொல்லாதவன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன்,விடுதலை 1, விடுதலை 2 ஆகிய அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. முக்கியமாக சமூகத்தில் ஆரோக்கியமான விவாதத்தையும் அவை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவுடன் அரசன்: விடுதலை 2வுக்கு பிறகு சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அதன் ஷூட்டிங் தொடங்குவதற்கு தாமதம் ஆனது. எனவே சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்குவதற்கு கமிட்டாகிவிட்டார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இதில் சிம்புவுடன் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கியமான கேரக்டர்களை ஏற்றிருக்கிறார்கள். படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்து இரண்டவது ஷெட்யூல் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது.
என்ன கதை?: மதுரையிலிருந்து சென்னை வரும் ஒரு விளையாட்டு வீரர் எப்படி ரவுடியாக மாறுகிறார் என்பதையும்; அதை சுற்றி நடக்கும் விஷயங்களும்தான் படத்தின் ஒன் லைன் சொல்லப்படுகிறது. அதுமட்டுமன்றி சென்னையை சேர்ந்த மயிலை சிவா என்கிற டைகர் சிவாவின் வாழ்க்கையைத்தான் படமாக எடுத்திருக்கிறார் என்றும் ஒரு தகவல் ஓடுகிறது. எது எப்படியோ வெற்றிமாறன் எந்த சப்ஜெக்ட்டை கையில் எடுத்தாலும் அதற்கு நூறு சதவீதம் நேர்மையாக இருந்து உழைப்பை கொட்டுவார் என்பது மட்டும் உறுதி.
சிம்புவுக்கும் முக்கியமான படம்: இப்படம் சிம்புவுக்கு முக்கியமான ஒன்றுதான். அவர் தனது செகண்ட் இன்னிங்ஸில் மாநாடு படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தாலும்; பத்து தல, தக் லைஃப் ஆகிய படங்கள் சறுக்கலையே கொடுத்தன. கண்டிப்பாக அந்த சறுக்கல் அரசன் படத்தில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை எஸ்டிஆருக்கும், அவரது ரசிகர்களுக்கும் இருக்கிறது. ஷூட்டிங்கில் பல காட்சிகளில் சிம்பு சிங்கிள் டேக்கில் ஓகே செய்துவிடுவதாகவும்; வெற்றிக்கும் சிம்புவுக்கும் மிகப்பெரிய புரிதல் ஏற்பட்டுவிட்டதால்; இந்தக் கூட்டணியில் இன்னும் சில படங்களை எதிர்பார்க்கலாம் என்பது திரைத்துறையில் பேச்சு.
வெற்றிமாறன் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வெற்றிமாறன், "அரசன் படத்தின் கதையை 2003ஆம் ஆண்டே எழுதிவிட்டேன். பொல்லாதவன் படத்துக்கு முன்னதாகவே எழுதிய கதை அது. இந்தப் படத்துக்கு கதையை எழுதி முடித்துவிட்டுதான் ஷூட்டிங்கிற்கு சென்றிருக்கிறேன். எனது மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது இது சீக்கிரமே முடியும் படமாக இருக்கும் இன்னும் சில நாட்களில் சில அப்டேட்டுகளை விடலாம் என்று நினைக்கிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications















