அந்த மனசு தான் சார் கடவுள்.. உதவி இயக்குநர் உயிரை காப்பாற்ற தக்க சமயத்தில் உதவிய சிம்பு!
சென்னை: பத்து தல படத்தின் உதவி இயக்குநர் உயிருக்காக போராடி வந்த நிலையில், அவரது உயிரை காப்பாற்ற நடிகர் சிம்பு பண உதவி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எப்போதுமே தன்னை சுற்றி இருப்பவர்களை நன்றாக கவனித்துக் கொள்ளும் பரந்த மனம் படைத்தவர் தான் சிம்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சமீபத்தில், அவர் செய்த உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் கம்பேக் கொடுத்த நிலையில் தொடர்ந்து தனது ரசிகர்களுக்காக உடல் உழைப்பை அதிகம் செலவிட்டு வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர்ந்து கடுமையாக உழைத்து நடித்து வருகிறார். அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படத்தில் சிம்பு நடிப்பதற்காக தயாராகி வருகிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த படம் படப்பிடிப்பை தொடங்க உள்ளது.

STR 48: அதற்காக துபாயில் நடிகர் சிம்பு தீவிரமாக பல பயிற்சிகளை எடுத்துக் கொண்டு தயாராகி வருகிறார். ஏற்கனவே வரலாற்று திரைப்படமான அந்த படத்திற்காக மலேசியா மற்றும் தாய்லாந்தில் சில விசேஷ தற்காப்பு கலைகளை பயிற்சி செய்து வந்தார் சிம்பு. மேலும், நீளமாக தனது முடியை தொடர்ந்து வளர்த்து வருகிறார். 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக உள்ள பீரியட் பிலிமில் சிம்பு இரட்டை வேடத்தில் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்து மிரட்ட காத்திருக்கிறார்.
இந்த ஆண்டு சிம்பு நடிப்பில் பத்து தல படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்தத் திரைப்படம் சரியாக போகவில்லை. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான மஃப்டி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக அந்த படம் உருவாகி இருந்தது. அதில், இயக்குநர் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி இருந்தார் சரவணன்.
உதவி இயக்குநருக்கு உதவி: சமீபத்தில், திடீரென உடல்நலக்குறைவு காரணமாக சரவணன் உயிருக்குப் போராடும் சூழ்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தத் தகவல் நடிகர் சிம்புவுக்கு எட்டிய நிலையில் உடனடியாக அவரது மருத்துவ செலவுக்காக ஒரு லட்சம் ரூபாயை சிம்பு கொடுத்து உதவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆபத்து காலத்தில் பெரிய உதவி செய்தாலே பெரிய உதவியாக கருதப்படும் நிலையில், உதவி இயக்குநருக்கு சிம்பு செய்த உதவியை சினிமா துறையில் இருக்கும் பலர் பாராட்டி வருகின்றனர்.
மாநாடு படத்திற்கு பிறகு வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல உள்ளிட்ட படங்கள் சுமாராக ஓடிய நிலையில், மீண்டும் சூப்பர் ஹிட் படத்தை அடுத்த ஆண்டு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு கொடுப்பார் என ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக சிம்புவுக்கு இந்த படம் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
திருமணம் எப்போது?: நடிகர் சிம்புவுக்கு சீக்கிரம் திருமணம் செய்து பார்த்து விட வேண்டும் என அவரது தந்தை டி. ராஜேந்தர் மற்றும் அம்மா உஷா இருவரும் பெண் தேடும் படலத்திலும் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர். சமீபத்தில், சிம்பு ஒரு ரெஸ்டாரன்டில் ஒரு பெண்ணுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியான நிலையில், அவர் தான் சிம்பு திருமணம் செய்துக் கொள்ளப் போகும் பெண்ணா? என்கிற கேள்விகளும் எழுந்தன.


Click it and Unblock the Notifications











