சிம்புவின் சூப்பர் சம்பவம் பார்க்க ரெடியா?.. எஸ்டிஆர் 48 படம் இந்த தேதியில் ஆரம்பிக்குதா?
சென்னை: சிம்பு நடிப்பில் எஸ்டிஆர் 48 படம் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என கேள்விகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அதுதொடர்பான தகவல் ஒன்று சினிமா வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது.
கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள் எஸ்டிஆர் 48 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்கிற கேள்வியை எழுப்பி வந்த நிலையில், தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் விரைவில் வெளியிடும் என தெரிகிறது. மேலும், நடிகர் சிம்பு கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் தயாரிப்பில்: மாநாடு படத்திற்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம் பெரிதாக ஓடவில்லை. கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படமும் சொதப்பி விட்டது. இந்நிலையில், எஸ்டிஆர் 48 படத்தின் மீது ரொம்பவே நம்பிக்கையுடன் இருக்கிறார் சிம்பு. முதல் முறையாக 100 கோடி பட்ஜெட்டில் சிம்புவை வைத்து பிரம்மாண்டமாக அந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கப் போவதாக கூறப்பட்டது.
எஸ்டிஆர் 48: கேம் ஆஃப் த்ரோன்ஸ் கிளைமேக்ஸ் காட்சி போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட விளம்பர வீடியோ ஒன்றை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கம்மிங் சூன் என போட்டிருந்தார். எஸ்டிஆர் 48 படத்தின் மேக்கிங் வீடியோ என ரசிகர்கள் நினைத்த நிலையில், அது விளம்பரம் என தெரிய வந்ததும் இதே அளவுக்கு படு மாஸாக படம் வந்தால் நல்லா இருக்கும் என நினைத்தார்கள். ஆனால், படப்பிடிப்பே ஆரம்பமாகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது சிம்பு ரசிகர்களை அப்செட் ஆக்கியது.
தக் லைஃப் படத்தில் சிம்பு: எஸ்டிஆர் 48 படத்தில் சிம்பு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸாக கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி தக் லைஃப் படத்திலிருந்து கால்ஷீட் காரணமாக விலகிய நிலையில் சிம்பு அந்த படத்தில் தற்போது நடித்து வருகிறார். அவரது போர்ஷன் விரைவில் முடிய உள்ள நிலையில் அடுத்ததாக எஸ்டிஆர் 48 படத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூட்டிங் எப்போது: துல்கர் சல்மான், ரித்து வர்மா மற்றும் கௌதம் மேனன் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி வரும் ஜூன் 8ம் தேதி சிம்புவை எஸ் டி ஆர் 48 படத்தை வைத்து ஆரம்பிக்கப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இது தொடர்பான அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசரி கணேஷ் எதிர்ப்பு: சிம்பு தனது தயாரிப்பில் மேலும் இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்டு தான் மற்ற தயாரிப்பு நிறுவனங்களில் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஐசரி கணேஷ் வலியுறுத்தி வரும் நிலையில், அவரது எதிர்ப்பை மீறி டெல்லியில் சமீபத்தில் தக் லைப் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக எஸ் டி ஆர் 48 படமும் விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











