ஈஸ்வரன் FDFS.. தியேட்டர்களில் களைகட்டும் தாண்டவப் பொங்கல்.. சிம்பு இன்ட்ரோவுக்கு செம விசில்!
சென்னை: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிம்புவின் திரைப்படம் வெளியாகி உள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தாண்டவப் பொங்கலாக ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது.
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து ஈஸ்வரன் படத்தின் FDFS காட்சியையும் ரசிகர்கள் தியேட்டர்களில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
பேனருக்கு பாலாபிஷேகம்
தியேட்டர்களில் பெரிய கட் அவுட்டுகளுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், ஈஸ்வரன் பட பேனருக்கு சிம்பு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து, அதிகாலை காட்சியை அமர்க்களப்படுத்தி வருகின்றனர். சிம்பு என்றும், எஸ்.டி.ஆர் கம் பேக் என்றும் ரசிகர்கள் ஆரவாரமாக கூச்சலிட்டு திரையரங்குகளை திருவிழாவாக மாற்றினர்.
மாஸ் டைட்டில் கார்டு
சிம்பு ரசிகர்களுக்காக ஆரம்பமே அதிர வைக்க வேண்டும் என்கிற நோக்கில், ஈஸ்வரன் படத்திற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக டைட்டில் கார்டு, ரோகிணி திரையரங்கில் வண்ண விளக்குகளின் மேஜிக்கோடு சேர்ந்து வந்ததை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.
கையில் பேட்டுடன்
கையில் பேட்டுடன் கிராமத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் சிம்புவின் மாஸ் என்ட்ரியும் பெண்கள் ஈஸ்வரா என கூக்குரலிடும் சத்தமும் அட்டகாசமான துவக்கத்தை ஈஸ்வரன் படத்துக்கு கொடுத்துள்ளது. 2019ம் ஆண்டு பொங்கலுக்கு வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியான பின்னர், மீண்டும் 2021ல் சிம்புவின் ஈஸ்வரன் படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிதி அகர்வால், மகத்
சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் ஈஸ்வரன் படத்தை ரசிகர்களுடன் நடிகர் மகத் மற்றும் ஈஸ்வரன் பட நாயகி நிதி அகர்வால் கண்டு ரசித்தனர். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் படக்குழுவுடன் வந்து படத்தை பார்த்து ரசித்தார். ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
சந்தோஷத்தில் சிம்பு ரசிகர்கள்
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிம்புவை திரையில் பார்க்கும் சந்தோஷமே பெரிதாக இருக்கும் நிலையில், பக்காவான ஃபேமிலி என்டர்டெயினராக ஈஸ்வரன் படம் வந்துள்ள நிலையில், தியேட்டர்களில் ஆடிப் பாடி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர் சிம்பு ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











