தாமதமாகும் பத்து தல டப்பிங்... சிம்புவால் வந்த சிக்கல்... பாங்காக் வரை போன பஞ்சாயத்து!
பாங்காக்: சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கிருஷ்ணா இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் பாடல் கடந்த 3ம் தேதி வெளியானது.
பத்து தல படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் வேலைகளில் இயக்குநர் கிருஷ்ணா பிஸியாகவுள்ளார்.
இந்நிலையில், பத்து தல படத்தின் டப்பிங் பணிகளை முடிக்காமல் சிம்பு பாங்காக் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிற்து.

எதிர்பார்ப்பில் பத்து தல
மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து சிம்பு நடித்துள்ள திரைப்படம் பத்து தல. கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தப் படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டராக நடித்துள்ள பத்து தல, மார்ச் 30ம் தேதி வெளியாகிறது. ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனால் பத்து தல மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

ஹிட் அடித்த ஃபர்ஸ்ட் சிங்கிள்
இந்நிலையில், சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. 'நம்ம சத்தம்' எனத் தொடங்கும் இந்தப் பாடலை விவேக் எழுதியுள்ளார். ஏஆர் ரஹ்மானின் ரகளையான இசையில் அவரும் யோகி சேகரும் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலில் கறுப்பு வேஷ்டி, சட்டையில் லைட்டான சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன் என்ட்ரி கொடுக்கும் சிம்பு. ரசிகர்களை செம்ம வைப் செய்திருந்தார்.

தாமதமாகும் பத்து தல டப்பிங்
சிம்புவுடன் பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக், கலையரசன், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இவர்களில் சிம்பு தவிர மற்றவர்கள் அனைவரும் தங்களது போர்ஷனுக்கு டப்பிங் கொடுத்துவிட்டனர். இதனால் போஸ்ட் புரோடக்ஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாகியுள்ளது. ஆனால், சிம்பு மட்டும் இன்னும் டப்பிங் கொடுக்காமல் தாமதப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. பத்து தல ஷூட்டிங் முடிந்ததோடு பாங்காக் சென்றுவிட்டார் சிம்பு.

பாங்காக் செல்கிறதா படக்குழு
பாங்காக் சென்றுள்ள சிம்புவை படக்குழு தொடர்புகொண்டு டப்பிங் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது தான் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொள்வதற்காக பாங்காக் வந்துள்ளதால், என்னால் உடனே வரமுடியாது எனக் கூறிவிட்டாராம். மேலும், பாங்காக்கில் வைத்து பத்து தல டப்பிங்கை முடித்துவிடலாம், அதனால் படக்குழுவை அங்கு வர சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் இந்த பதிலால் மொத்த படக்குழுவும் என்ன செய்வதென்று தெரியாமல் திணறுகிறதாம்.

மீண்டும் முதலில் இருந்தா?
மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்கள் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் சிம்பு. முன்னதாக சொன்ன டைமிங்கில் ஷூட்டிங் வரமாட்டார், அடிக்கடி கால்ஷீட் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வதும் வழக்கமாக இருந்தது. ஆனால், மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்கள் மூலம் தன்மீது இருந்த ரிமார்க்குகளை எல்லாம் காலி செய்தார் சிம்பு. அடடா என ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடும் நேரத்தில் மீண்டும் பத்து தல படம் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் சிம்பு. இதெல்லாம் இப்போது தேவையா என சிம்புவின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











