உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ்.. அவர் குடும்பத்துக்கு சிம்பு செய்த உதவி என்ன தெரியுமா?
சென்னை: பா.ரஞ்சித் இயக்கிவரும் வேட்டுவம் படத்தின் ஷூட்டிங் நாகை மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. சண்டை காட்சி படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மோகன் ராஜின் குடும்பத்துக்கு சிம்பு செய்த உதவி குறித்து தெரியவந்திருக்கிறது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துவரும் திரைப்படம் வேட்டுவம். ரஞ்சித்தின் இயக்கம் என்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்று ரசிகர்கள் உறுதியாக கூறுகிறார்கள். இப்படத்தை ரஞ்சித்தே தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கடந்த வாரம் ஒரு விபரீதம் நிகழ்ந்துவிட்டது.
என்ன ஆனது?: அதாவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைத்து படத்துக்காக ஒரு சண்டை காட்சியை படமாக்கியது படக்குழு. அப்போது ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் என்பவர் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதுதொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பலரும் ரஞ்சித்துக்கும், படக்குழுவுக்கும் தங்களது கடுமையான கண்டனங்களை முன்வைத்தார்கள். அவர் மீது வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.

ரஞ்சித்தின் விளக்கம்: எதிர்பாராமல் நடந்த இந்தத் துயர சம்பவம் தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில், "ஜூலை 13ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த "வேட்டுவம்" படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது.
பெரிய அதிர்ச்சி: எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துகள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம்; தவறாமல் பின்பற்றினோம். ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மோகன் ராஜ் அண்ணன் அவர்கள், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர். செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம்" என சோகத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
சிம்பு செய்த உதவி: இந்நிலையில் மோகன் ராஜ் உயிரிழந்த சூழலில்; அவரது குடும்பத்துக்கு நடிகர் சிம்பு உதவி செய்திருக்கிறார். அதாவது மோகன் ராஜுடைய குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அந்தக் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார் எஸ்டிஆர். இதனையடுத்து பலரும் சிம்புவுக்கு தங்களது பாராட்டை தெரிவித்து அவருக்கு நல்ல மனது என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











