மஃப்டி ரீமேக்.. தயாரிப்பாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு... அடம் பிடித்து நடிக்கும் சிம்பு..!
மஃப்டி படத்தின் ரீமேக்கில் சிம்பு நடிக்க விடாமல் தடுக்க பலர் முயற்சித்து வருவது தெரிய வந்துள்ளது.
சென்னை: பல்வேறு தரப்பில் இருந்து வரும் எதிர்ப்புகளையும் மீறி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் படத்தில் நடிப்பதில் நடிகர் சிம்பு உறுதியாக இருக்கிறார்.
சிறு வயதில் இருந்தே தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. சில காலம் சரியான படங்களை தேர்வு செய்து நடிக்காததால், அவரது படங்கள் தோல்வி அடைந்தன. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட சிம்பு, செக்கச் சிவந்த வானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ஓவியா நடித்த 90 எம்எல் படத்திற்கு இசையமைத்ததுடன், கெஸ்ட் ரோலிலும் நடித்தார். முன்னாள் காதலி ஹன்சிகாவின் மஹா படத்திலும் அவர் கெஸ்ட் ரோல் செய்துள்ளார். இதற்கிடையே தம்பி திருமணம், உடல் எடை குறைப்பு சில மாதங்கள் தனது சொந்த வேலைகளில் பிஸியாக இருந்தார்.

ஞானவேல்ராஜா படம்:
தற்போது உடல் எடையைக் குறைத்து மீண்டும் இளமையான தோற்றத்திற்கு மாறி இருக்கும் சிம்பு மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் தான் சிம்பு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தில் நடிக்க தொடங்கினார் சிம்பு.

மஃப்ட்டி ரீமேக்:
கவுதம் கார்த்திக்குடன், சிம்பு நடிக்கும் இந்த படம் கன்னடத்தில் வெற்றி பெற்ற மஃப்ட்டி படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கை:
இந்நிலையில் இப்படம் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தில் சிம்பு நடிக்க பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. தேவராட்டம், மிஸ்டர் லோக்கல் உள்பட ஞானவேல்ராஜா தயாரித்த அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்தன. இதனால் அவர் பல சிக்கல்களில் இருக்கிறார். அதில் இருந்து மீண்டு வர சிம்பு நடிக்கும் படத்தை தான் அவர் நம்பியுள்ளார்.

திரை மறைவு வேலை:
ஆனால் ஞானவேல்ராஜா மீண்டு வரக்கூடாது என்பதில் சிலர் தீவிரமாக செயல்படுவதாக நம்மை தொடர்புகொண்ட சிலர் கூறினர். இதனால் சிம்பு - ஞானவேல்ராஜா கூட்டணி எப்படியாவது கலைக்க வேண்டும் என அவர்கள் வேலை செய்து வருவதாக தெரிவித்தனர். சிம்புவை தொடர்பு கொண்டு மஃப்ட்டி ரீமேக்கில் நடிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

பிரேக் தேடும் சிம்பு:
ஆனால் சிம்புவோ ஞானவேல்ராஜா படத்தில் நடிப்பதில் உறுதியாக இருக்கிறார். தயாரிப்பாளர் யாராக இருந்தாலும், கதை நன்றாக இருப்பதால் அந்த படத்தில் நடிப்பதாக அவர்களிடம் சிம்பு கூறிவிட்டதாக தெரிகிறது. எனவே ஞானவேல்ராஜா படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிலும் சிம்பு கலந்துகொள்வார் என்றே கூறப்படுகிறது. சிம்புவும் தனக்கு ஒரு பெரிய பிரேக் வேண்டும் என எதிர்பார்ப்பதால், மஃப்ட்டி ரீமேக்கிற்கு பிறகு தான் அவர் மாநாடு படத்தில் கலந்துகொள்வார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











