Pathu Thala Box Office: முதல் வாரம் பத்து தல வசூல் நிலவரம்... சிம்பு எதிர்பார்க்காத கலெக்ஷன்!
சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் கடந்த வாரம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
முதல் நாளில் நல்ல ஓபனிங் கிடைத்தாலும் நெகட்டிவான விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்தது.
முக்கியமாக வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கு கிடைத்த வரவேற்பால், பத்து தல திரைப்படத்தின் வசூல் குறைந்துள்ளது.
அதன்படி, முதல் வாரம் பத்து தல படத்தின் வசூல் நிலவரம் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

பத்து தல முதல் வாரம்
சிம்புவின் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பத்து தல திரைப்படம் கடந்த வாரம் (மார்ச் 30ம் தேதி) வெளியானது. கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்தி, ப்ரியா பவானி சங்கர், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஸ்டுடியோ க்ரீன் தயாரித்த இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்நிலையில், பத்து தல படத்திற்கு முதல் நாளில் செம்ம மாஸ்ஸான ஓபனிங் கிடைத்தது.

முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ்
அதனால், இந்தப் படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 12 கோடி ரூபாய் வரை வசூலித்தது. அதேநேரம் பத்து தல படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால் இரண்டாவது நாளில் கலெக்ஷன் ரொம்பவே குறையத் தொடங்கியது. அதன்படி உலகம் முழுவதும் 8 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு இன்னொரு முக்கியமான காரணம் என்றால், மார்ச் 31ம் தேதி வெளியான வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததே ஆகும்.

சிம்புவுக்கு சர்ப்ரைஸ்
நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்தும் முதல் இரண்டு நாட்கள் 20 கோடி ரூபாய் வரை வசூலித்தது பத்து தல. மேலும் வார இறுதிநாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளிலும் பத்து தல படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லையாம். மூன்றாம் நாள் 7 கோடி ரூபாயும், 4ம் நாளான நேற்று 8 கோடி வரையிலும் கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி முதல் வாரத்தில் மொத்தமாக 35 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது பத்து தல திரைப்படம். இது எதிர்பார்த்ததை விட குறைவு என்றாலும், சிம்புவின் கேரியரில் கொஞ்சம் பெஸ்ட் என்றே சொல்லப்படுகிறது.

பத்து தல சக்சஸ் மீட்
முதல் நாளில் நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால், படம் வெளியான மறுநாளே வெற்றிவிழாவை நடத்தியது பத்து தல டீம். அதில், சிம்பு, இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். பத்து தல படத்தில் சிம்பு இரண்டாம் பாதியில் தான் என்ட்ரி கொடுத்துள்ளார். படம் முழுக்க கெளதம் கார்த்திக் தான் லீட் ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், சிம்பு கேரக்டரில் இன்னும் கவனம் செலுத்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் கொடுத்திருந்தனர்.

ரோகிணி தியேட்டர் சர்ச்சை
பத்து தல படத்திற்கு ரோகிணி தியேட்டரில் நடந்த சம்பவம் கொஞ்சம் நெகட்டிவான ப்ரோமோஷனாக மாறியதும் உண்மை. முதல் நாளில் ரோகிணி தியேட்டரில் படம் பார்க்கச் சென்ற நரிக்குறவ இன பெண்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இது மிகப் பெரிய சர்ச்சையானதால், பாய்காட் ரோகிணி தியேட்டர் என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பத்து தல திரைப்படம் இரண்டாவது வாரம் 15 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











