மீண்டும் தள்ளிப்போன சிம்புவின் மாநாடு வெளியீடு.. சுரேஷ் காமாட்சி உருக்கம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை: சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்தப் படத்தை இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இந்தப் படம் டைம் லூப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெயிலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மாநாடு இசை வெளியீடு
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் பின்னர் தேதி ஒத்திவைக்கப்பட்டு வரும் 25ஆம் தேதி அதாவது நாளை ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது.

கண்ணீர் விட்ட சிம்பு
இதில் பேசிய சிம்பு தனக்கு நிறைய பிரச்னை கொடுக்கப்படுவதாகவும், ரொம்பவே கஷ்டப்படுவதாகவும் கூறி கண்ணீர் விட்டார். மேலும் அதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன். என்னை நீங்கதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கண்ணீர்விட்டு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

வைரலான வீடியோ
சிம்பு அழுவதை பார்த்த நடிகர் மகத், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தனஞ்செயன் ஆகியோர் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறி அமைதிப்படுத்தினர். சிம்பு கண்ணீர் விட்ட அந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலானது.

மீண்டும் தள்ளிப்போன ரிலீஸ்
இந்நிலையில் மாநாடு படம் நாளை ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் செம ஹேப்பியாக இருந்தனர். படக்குழுவினரும் நாளை மாநாடு படம் ரிலீஸ் என சமூக வலை தளங்களில் தெரிவித்து வந்தனர். இதனால் ரசிகர்களும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். இந்நிலையில் மாநாடு படம் நாளை ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வலியோடு தெரிவிக்கிறேன்
இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்.. என குறிப்பிட்டுள்ளார்.

ஏன் என்ன ஆச்சு?
சுரேஷ் காமாட்சியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஏன் என்ன ஆச்சு? டிக்கெட்டெல்லாம் புக் பண்ணிட்டோம், இப்போ வந்து சொல்றீங்களே என கேட்டு வருகின்றனர். இன்னும் பலர் உயிர கொடுத்து நைட்டெல்லாம் வேலை பார்த்துட்டு இருக்கோம்... கடுப்பேத்தாதீர்கள் என்று கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











