Simbu: “ரோபோவுக்கு கீ கொடுக்குற மாதிரி என்னை இயக்கினார்..” சிம்புவின் வெற்றிக்கு இவர் தான் காரணமா?
சென்னை: கோலிவுட்டின் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து திரை பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சினிமா, வாழ்க்கை இரண்டிலும் தனது வெற்றிக்கு யார் காரணம் என சிம்பு ஓபனாக பேசியுள்ளார்.
சிம்புவின் வெற்றிக்கு காரணம் யார்..?
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் சிம்பு. லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலுடன் என்ட்ரியான சிலம்பரசன் தற்போது மாஸ் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அஜித் ரூட்டில் அடிக்கடி தோல்வி படங்களில் நடித்தாலும், சிம்புவுக்கு ரசிகர்களிடம் இருக்கும் மாஸ் மட்டும் இன்னும் குறையவில்லை. மாநாடு மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்த சிம்பு, அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களிலும் நடித்திருந்தார்.

இந்நிலையில், சிம்பு இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது 48வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. ஹிஸ்டாரிக்கல் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகும் STR 48 படத்தில் சிம்பு இரண்டு கேரக்டர்களில் நடிக்கவுள்ளார். தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. STR 48 ஷூட்டிங் முடிந்த பின்னர் தான் அடுத்த படம் குறித்து சிம்பு முடிவெடுக்க உள்ளாராம்.
அதன்படி சிம்புவின் 49வது படத்தை கோலிவுட்டின் லீடிங் டைரக்டர் ஒருவர் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், சிம்புவின் 50வது படத்தை அவரே சொந்தமாக தயாரித்து இயக்கவுள்ளாராம். இந்தப் படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிம்பு, தனது வெற்றிக்கு யார் காரணம் என்பதை மனம் திறந்து கூறியுள்ளார்.
சினிமாவிலும் வாழ்க்கையிலும் என்னை தகுதிப்படுத்தி நிற்க வைக்க பெரிதாக கஷ்டப்பட்டது என்னோட அப்பா தான் என சிம்பு ஓபனாக தெரிவித்துள்ளார். ரோபோவுக்கு கீ கொடுக்குற மாதிரி அப்பா என்னை இயக்கினார். அவர் சொல்லிக் கொடுத்ததை மட்டும் தான் இதுவரை செய்திருக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் எனது அப்பா தான் என் மீது பேரன்பு கொண்டவர் என்பதையும் சிம்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறுவயது முதலே சிம்புவை சினிமாவில் நடிக்க வைத்து அவரை வெற்றிப் பெற வைத்தது டி ராஜேந்தர் தான். கோலிவுட்டில் அனைத்து வித்தைகளையும் தெரிந்து வைத்திருக்கும் சகலகலா வல்லவன் என்றால், அதில் டி. ராஜேந்தரும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தனது அப்பா குறித்து சிம்பு மனம் திறந்துள்ளது அவரது ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











